புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் தெருநாய்கள் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு அமர்வு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி தானாகவே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தி டெல்லிக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தும் வகையில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி மேற்கு வங்காளம், தெலுங்கானா ஆகிய மாநில தலைமை செயலாளர்கள் தவிர மற்ற மாநில தலைமை செயலாளர்கள் அனைவரையும் கடந்த திங்கட்கிழமை நேரில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, அனைவரும் ஆஜராகினர். அப்போது, தெருநாய்களுக்கு உணவளிக்க ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் உள்ளாட்சி அமைப்புகள் தனியாக ஒரு இடம் ஒதுக்கவில்லை என்பதற்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.
இதுமட்டுமல்லாமல் அரசு அலுவலக வளாகங்களிலும், பொதுத்துறை நிறுவன அலுவலக வளாகங்களிலும் ஊழியர்கள் தெருநாய்களுக்கு உணவளிப்பதற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மக்கள் தினந்தோறும் அவதிப்படும் தெருநாய் பிரச்சினைக்கு இதுமட்டும் தீர்வு அல்ல. தெருநாய் பிரச்சினை தொடர்பாக 7-ந்தேதி (இன்று) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தெருநாய் பிரச்னை தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கூடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின்போது, “நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடம், மருத்துவமனை, ரெயில் நிலையங்களில் தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும். பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் விரிவான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.