புதுடெல்லி: நாடு முழுவதும் பொது இடங்களில் திரியும் தெரு நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசி போட்டு, காப்பகங்களில் அடைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த 4 வாரங்களுக்குள்வழிகாட்டு செயல்முறைகளை உருவாக்குமாறு இந்திய விலங்குகள் நல வாரியத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து ரேபிஸ் தொற்று ஏற்பட்டது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. நாடு முழுவதும் இந்த பிரச்சினை இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. ‘விலங்குகள் கருத்தடை விதிகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
அதேபோல, தெரு நாய் கடித்து ரேபிஸ் நோய் தாக்கும் இந்த பிரச்சினை ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்க வாய்ப்பு உள்ளது.எனவே, இந்த வழக்கில் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள், கால்நடை பராமரிப்பு,உள்ளாட்சி ஆகிய துறை செயலர்கள் பதில் அளிக்க வேண்டும். அத்துடன் விலங்குகள் கருத்தடை விதிகளை செயல்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கில் பல மாநிலங்கள் பதில் அளித்தன. பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிகடந்த 3-ம் தேதி நேரில் ஆஜராகினர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் தெரு நாய்கள் பல்வேறு பகுதிகளிலும் குழந்தைகள், அப்பாவி மக்களை கடித்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட உத்தர வுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
- மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் திரியும் தெரு நாய், மாடு போன்ற விலங்குகளை மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள், மாநிலங்களின் சாலைப் போக்குவரத்து துறை, பொதுப்பணித் துறை ஆகியவை அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு நெடுஞ்சாலைகளில் திரியும் நாய்கள், மாடுகளைக் கண்டறிந்து அவற்றைப் பிடித்துக் கொண்டுபோய் காப்பகங்களில் அடைக்க வேண்டும். நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்து, தடுப்பூசிபோட வேண்டும். காப்பகங்களில் அடைக்கப்படும் நாய்கள், மாடுகள் ஆகியவை விலங்குகள் நல பாதுகாப்புச் சட்டத்தின்படி பராமரிக்கப்பட வேண்டும்.
- 24 மணிநேர ரோந்துக் குழு: நெடுஞ்சாலைகளில் திரியும் தெரு நாய், மாடு போன்ற விலங்குகளை உள்ளூர் காவல் துறை, கால்நடை அலுவலர்கள், உள்ளூர் நிர்வாகங்கள் உதவியுடன் பிடிக்க, 24 மணி நேரமும்செயல்படும் நெடுஞ்சாலை ரோந்துக் குழுக்களை உருவாக்க வேண்டும்.
- நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் தொடர்பு கொள்ள உதவி எண்களை அறிவிக்க வேண்டும். இந்த உத்தரவைகளை உறுதியாக நடைமுறைப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவருடன் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச தலைமைச் செயலர்கள் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். உத்தரவுகளை செயல்படுத்தாத அதிகாரிகளை இதற்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும்.
- அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளும் ரேபிஸ் தடுப்பூசி மருந்துகளை இருப்பில் வைக்க வேண்டும். நாய்க்கடி, அதற்கான முதலுதவி உள்ளிட்டவை குறித்து மாணவர்கள், ஊழியர்களுக்கு அனைத்து பள்ளிகள், கல்வி நிறுவனங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- விளையாட்டு அரங்கங்களில் தெரு நாய்கள் நுழைவதை தடுக்க பாதுகாவலர்களை நியமிக்க நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் தெரு நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தொடர்ந்து ஆய்வு நடத்தவும், விலங்குகள் உணவுக் கழிவை தேடி வராமல் இருக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தவும் ரயில்வே, மாநில போக்குவரத்துக் கழகங்கள், நகராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்படுகிறது.
- அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு அரங்கங்களில் நாய்க்கடியை தடுப்பது மற்றும் தெரு நாய் மேலாண்மை திட்டங்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரே மாதிரியாக செயல்படுத்தும் வகையில் நிலையான வழிகாட்டு செயல்முறைகளை இந்திய விலங்குகள் நல வாரியம் 4 வாரங்களுக்குள் உருவாக்கி அறிவிக்க வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.