“மரியாதை என்பது ஒருவழிப்பாதை இல்லை" – கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பதிவிட்ட பிரபலங்கள்

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயனுடன் ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது.

கௌரி கிஷன்
கௌரி கிஷன்

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் “கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?” என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது.

அப்போது நடிகை கௌரி கிஷன், “இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம்.

அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்ய போறீங்க?. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங்.

ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்?

இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை.

கௌரி கிஷன்
கௌரி கிஷன்

இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசினார். இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. பலரும் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர்.

அதைத் தொடர்ந்து பாடகி சின்மயி தன் எக்ஸ் பக்கத்தில்,“கௌரி தனக்காகப் பேசத் துணிந்ததுக்கு பாராட்டுகள்! அவள் ஒரு ஜர்னலிச ஸ்டூடன்ட். மிகவும் புத்திசாலி.

அவள் பிரபலமடைவதற்கு முன்பிருந்தே எனக்கு அவளைத் தெரியும். என் நினைவில் இருக்கும் அவள் எப்போதும் நல்லவளாகவும், அன்பானவளாகவும், உணர்வுள்ள மனுஷியாகவும் மட்டுமே. அந்த பத்திரிகையாளர் இதிலும் இரட்டை நிலைப்பாடு எடுத்தது வெட்கக்கேடானது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் நடிகை குஷ்பு, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், “பெண்களின் எடை குறித்து கேள்வி எழுப்புவது வெட்கக்கேடானது; பெண்களின் எடை குறித்து பேசுவது உங்களின் வேலையும் இல்லை.

இப்படி பேசுபவர்களின் குடும்ப பெண்களிடம் நாங்களும் இதே கேள்வியை கேட்கலாமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கௌரி கிஷன்
கௌரி கிஷன்

தொடர்ந்து தன் எக்ஸ் பக்கத்தில், “பத்திரிகைத்துறை தனது தரத்தை இழந்துவிட்டது. சில பத்திரிகையாளர்கள் ஜர்னலிசத்தை சாக்கடைக்கு இழுத்துச் செல்கிறார்கள்.

ஒரு நடிகையின் எடை எவ்வளவு என்பது குறித்து தெரிந்து கொள்வதா அவர்களின் வேலை? இந்த கேள்வியை கதாநாயகர்களிடம் கேட்பார்களா? இதெல்லாம் அவமானம்.

தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று பதிலடி கொடுத்த கௌரி கிஷனுக்கு வாழ்த்துகள். மரியாதை என்பது ஒருவழிப்பாதை இல்லை, உங்களுக்கு மரியாதை தேவை என்றால் அதை கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில், “கௌரி கிஷன் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். உங்களிடம் கேள்வி கேட்ட நிருபரின் செயலும் கேள்வியும் வன்மையாக கண்டிக்கத்தக்கது, வெட்கக்கேடானது.

நடிகைகள் இன்னும் இந்த அநாகரீகமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது தமிழ் சினிமா இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவு என்பதைக் காட்டுகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.