கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய `நாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸாகி இருக்கிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவருடைய அலுவலகத்திற்கு கமல்ஹாசனுடைய நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பிறந்தநாள் ஸ்பெஷலாக அவருடைய 237-வது திரைப்படத்தின் படக்குழுவினரை அறிவித்திருக்கிறார்கள்.

ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவ் இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக களமிறங்குகிறார்கள். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்தாண்டே வெளியாகியிருந்தது.
தற்போது படத்திற்கான முதற்கட்டப் பணிகளில் இயக்குநர்கள் அன்பறிவ் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.
படத்தின் திரைக்கதை பணிகளை மலையாள சினிமாவின் திரைக்கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் கவனித்து வருகிறார்.
மலையாள இயக்குநர்களான ஆஷிக் அபு மற்றும் திலீஷ் போத்தனுடன் இணைந்து பல ஹிட் படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் ஷ்யாம் புஷ்கரன்.
மலையாள சினிமாவைத் தாண்டி மற்ற சினிமாக்களிலும் பெரியளவில் கவனம் ஈர்த்த `கும்பளங்கி நைட்ஸ்’ படத்தின் கதையாசிரியரும் இவர்தான்.
மலையாள சினிமாவின் முக்கியமான திரைக்கதையாசிரியர் எனக் கொண்டாடப்படும் ஷ்யாம் புஷ்கரன் கமல்ஹாசனின் 237-வது படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி தருகிறார்.

படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜோய் கமிட்டாகியிருக்கிறார்.
மலையாள, தமிழ், தெலுங்கு என சமீப நாட்களாக தூள் கிளப்பும் இசையைக் கொடுத்து வருகிறார் ஜேக்ஸ் பிஜோய்.
`லோகா’, `துடரும்’, `நரிவேட்டை’ என ஜேக்ஸ் பிஜோய் இந்தாண்டில் மட்டும் மலையாள சினிமாவில் பல சார்ட் பல்ஸ்டர்களைக் கொடுத்திருக்கிறார்.
அதைத் தாண்டி தெலுங்கிலும் `சரிபோதா சனிவாரம்’ படத்திற்கு இசையமைத்து தற்போதைய சென்சேஷனாக ஜேக்ஸ் பிஜோய்தான் இந்தப் படத்தின் மியூசிக் டைரக்டர்.
இதைத் தாண்டி ஒளிப்பதிவாளராக சுனில்.கே படத்திற்குள் வந்திருக்கிறார்.
`ஆடு ஜீவிதம்’ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா எங்கும் கவனம் ஈர்த்தவர் இவர்.
படத்தொகுப்பாளராக ஷிமீர் என்பவரும், கலை இயக்குநராக வினேஷ் பங்லன் கமிட்டாகியிருக்கிறார்கள்.

வினேஷ் பங்லன், `லக்கி பாஸ்கர்’, `லோகா’ உள்ளிட்ட பல படங்களுக்கு செட் அமைத்தவர்.
கிட்டத்தட்ட படத்தின் தொழில்நுட்ப குழுவிற்குள் மலையாள சினிமாவைச் சேர்ந்த பலரைதான் இப்படத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.