காபூல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டாத நிலையில், ‘போருக்கு தயார்’ என ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
“நட்பு நாடுகளான துருக்கியும், கத்தாரும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயன்றது. நவ.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் மிகுந்த நம்பிக்கையுடன் ஆப்கன் தரப்பில் பங்கேற்றோம். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரமாக கவனம் செலுத்தும் என எதிர்பார்த்தோம்.
இருப்பினும் இதில் பாகிஸ்தான் தரப்பு பொறுப்பற்ற முறையில், துளியும் ஒத்துழைப்பு கொடுக்காமல் அனைத்து பழியையும் ஆப்கன் மீது சுமத்துகிறது. இதில் பாதுகாப்பு சார்ந்த விவகாரம் முக்கியமானதாக உள்ளது. இதில் பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கைகள் அறவே அர்த்தமற்றது.
எங்கள் பகுதியில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. போர் புரிவது எங்களது முதல் தேர்வு அல்ல. இருப்பினும் போர் சூழல் எழுந்தால் அதை முறியடிப்பது எங்கள் உரிமை. பிற நாட்டுக்கு எதிரான செயல்பாட்டை ஆப்கன் மண்ணில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என கந்தஹார் நகரில் ஆப்கானிஸ்தானின் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் சனிக்கிழமை அன்று தெரிவித்தார்.
“பேச்சுவார்த்தை முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் இதில் பங்கேற்றவர்கள் நாடு திரும்புகின்றனர். வரும் நாட்களில் இந்த கூட்டம் நடைபெறுமா என்பதில் எந்த உறுதியும் இல்லை. எல்லை பகுதியில் போர் நிறுத்தத்தை ஆப்கன் தரப்பு முறியடிக்காத வரை அது அமலில் இருக்கும்” என பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் சுமார் 2,640 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. எல்லைப் பிரச்சினை காரணமாக அண்மைக் காலமாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. கத்தார் நாட்டின் சமரசத்தின்பேரில் கடந்த அக்.19-ம் தேதி சண்டை நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. எனினும் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.