Non Veg: வாரத்துக்கு எத்தனை முறை சாப்பிடலாம்? ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி விளக்கம்

‘அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடலாமா?’ விளக்கமளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன்.

Non Veg
Non Veg

“அசைவம் சாப்பிடுபவர்களில் ஒரு வகையினர், அசைவ உணவு பிரியர்கள். மற்றொரு தரப்பினர், புரோட்டீன் தேவைக்காக அடிக்கடி அசைவம் சாப்பிடுபவர்கள். தானியங்களைக் காட்டிலும் சில அசைவ உணவுகளில் புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பது உண்மைதான். அதேசமயம், அசைவ உணவுகளில் இயற்கையாகவே கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளது.

இருப்பினும், இறைச்சியில் சுவைக்காக அதிக அளவிலான எண்ணெய் சேர்த்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகிவிட்டது. மேலும், உப்பு, காரம், மசாலா பொருள்களையும் அசைவ உணவில் அதிகமாகச் சேர்க்கின்றனர். இவ்வாறு, அசைவ உணவுகளை கொழுப்புச்சத்து நிறைந்த உணவாக உட்கொள்ளும் ஆபத்தான போக்கையே பலரும் கடைப்பிடிக்கின்றனர். அசைவ உணவு நல்லதுதான். ஆனால், அதை உடலுக்குக் கெடுதலான வகையில் மாற்றி உட்கொள்வதுதான் ஆபத்தானது.

Non Veg
Non Veg

மீனில் உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புச்சத்து அதிகமுள்ளது. எனவே, மீன் சிறந்த உணவாகிறது. நீர்ச்சத்து அதிகமுள்ள எந்த உணவாக இருந்தாலும், அதை எண்ணெயில் பொரிக்கும்போது, நீர்ச்சத்துக்கு இணையான அளவு அந்த உணவில் எண்ணெய் சேகரமாகும். நீரிலேயே வாழ்வதால், மீனின் உடலில் அதிகளவில் நீர்ச்சத்து உள்ளது.

அதை எண்ணெயில் பொரிக்கும்போது, அதன் உடலிலுள்ள ஒவ்வொரு சொட்டு நீருக்கும் ஒவ்வொரு சொட்டு எண்ணெய் அதனுள் சேர்ந்துதான் சாப்பிட ஏதுவாக மீன் தயாராகும். இதனால், மீனிலுள்ள நல்ல கொழுப்புச்சத்து, உடலுக்குத் தீமை பயக்கும் கெட்ட கொழுப்பாக மாற வாய்ப்புள்ளது. எனவே, பொரித்த மீனை அடிக்கடி அல்லது அதிகளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மாறாக, குழம்பாகச் செய்து சாப்பிடுவது நல்லது.

சிக்கன், மட்டன், மீன் போன்ற பெரும்பாலான அசைவ உணவுகளையும் வெளிநாட்டினர் ‘க்ரில்டு’ (Grilled) எனும் எண்ணெய் சேர்க்காத குக்கிங் முறையில் தயாரிக்கின்றனர். இதன்மூலம், இறைச்சியானது, அதிலுள்ள கொழுப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து மூலமாகவே வேக வைக்கப்படுவதால், அந்த உணவிலுள்ள சத்துகள் நமக்குச் சரியாகக் கிடைக்கின்றன. இதுபோன்று க்ரில்டு உணவாகச் சாப்பிடலாம். அல்லது, இறைச்சி உணவுகள் எதுவானாலும் குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.

Non Veg
Non Veg

ஞாயிற்றுக்கிழமை என்பது பெரும்பாலான வீடுகளில் ‘மீட் டே’வாக (Meat Day) மாறிவிடுகிறது. குறிப்பாக, அன்றைய தினம் பலரும் 2 – 3 வேளைக்கு அசைவம் சாப்பிடுவதுண்டு. இதுவும் தவறான பழக்கம்தான். ஞாயிற்றுக்கிழமை உட்பட வாரத்தில் எந்த நாளாக இருந்தாலும், காலை அல்லது மதியத்தில் மட்டும் அசைவம் சாப்பிடலாம். இரவில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு, வாரத்துக்கு தலா 100 கிராம் வீதம் 1 – 3 தடவை மட்டும் அசைவம் சாப்பிடுவதே சரியானது.

அசைவ உணவுகள் செரிமானமாக அதிக நேரமெடுக்கும். இதுபோன்ற கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை ஒரே நாளில் பலமுறை உட்கொள்வது மிகவும் தவறு. நீண்ட, ஆரோக்கிய வாழ்வுக்கு ஒவ்வொரு நாளும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.

ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான வீடுகளில் அசைவம் தவிர, காய்கறிகள், தானியங்கள் சேர்த்த உணவுகள் சமைக்கப்படுவதில்லை. ஒருநேர உணவில் அசைவம், மற்ற இரண்டு வேளைகளில் காய்கறிகள், தானியங்கள் என நம் உணவுமுறை இருக்க வேண்டும்.

meat with vegetables pic
meat with vegetables pic

இறைச்சி உணவுகளைத் திரும்பத் திரும்பச் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாது. குறிப்பாக, புளி அதிகம் சேர்த்துச் சமைக்கப்பட்ட மீன் குழம்பை பலரும் நாள் கணக்கில் வைத்திருந்து, திரும்பத் திரும்ப சூடுபடுத்திச் சாப்பிடுவார்கள். இது தவறு.

அதிகபட்சமாக ஒருமுறை மட்டுமே மீன் குழம்பைச் சூடுபடுத்திச் சாப்பிடலாம். மீனில் நல்ல கொழுப்புச்சத்து உள்ளது. மீன் உணவை அதிக தடவைச் சூடுபடுத்தும்போது, உடலுக்குக் கெடுதலான கொழுப்பு அமிலங்களாக (Trans fatty acids) மாறும்.

உடலுழைப்பு குறையும்போது, நாம் செலவிடுகிற ஆற்றலுக்கு ஏற்ப உணவின் அளவைக் குறைத்துக் கொள்வது நல்லது. அது, இறைச்சி உணவுகளுக்கும் பொருந்தும். ’80 வயதிலும் நன்றாக வேலை செய்கிறேன். உடலுழைப்புடன், செரிமான பாதிப்புகளும் இல்லை’ என்பவர்கள், அசைவ உணவுகளை வாரத்தில் ஓரிரு முறை (குறைவான அளவில்) சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவாக இல்லாமல், குழம்பு மற்றும் சூப் செய்து சாப்பிடலாம்” என்று முடித்தார் தாரிணி கிருஷ்ணன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.