பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதாவது: வந்தே மாதரம் என்கிற முழக்கம் முதல் முதலாக ஒலித்து 150 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த எழுச்சிமிகு வார்த்தைகளை ஒவ்வொரு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என வந்தே மாதரம் பாடலுக்கு தெலங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய விழா எடுத்துவிட்டனர். ஆனால் வ.உ.சி., கொடி காத்த குமரன் வாழ்ந்த, அவர்கள் முழங்கிய வந்தே மாதரம் பாடலுக்கு தமிழகத்தில் ஒன்றுமே செய்யவில்லை.
எப்போதெல்லாம் திமுகவுக்கு பிரச்சினை வருகிறதோ, அப்போதெல்லாம் இங்கே தமிழகத்தில் இனம், பிரிவினை என ஒவ்வொரு ஆயுதமாக கையில் எடுத்து வருகின்றனர். தமிழ் பற்றை பேசாமல் திராவிடத்தை முன்னிறுத்தி திமுக பேசுகிறது. ஆனால் தமிழ் பற்று, தேசப்பற்றை பேசும் பொறுப்பு நமக்கு உள்ளது. கலை கலாச்சார பிரிவுக்கு முக்கிய பங்கு உள்ளது. இங்கே திரையுலகில் பூதம் பிடித்துள்ளது. திரைத்துறை ஒரு சாராரிடம் மட்டுமே சிக்கி உள்ளது. திரைத்துறையை விடுவிக்க என்ன வழியோ அதனை செய்ய வேண்டும். இங்கே ஒரு சிறிய படத்தை எடுத்தால், அதனை ரிலீஸ் செய்யும் வரை போதும் போதும் என்றாகி விடுகிறது. தீபாவளிக்கு கூட நல்ல படம் வரவில்லை. நல்ல படம் வருவதற்கு ஒருவரை மட்டுமே ஏன் பிடித்து வைத்து கொள்ள வேண்டும். திரைத்துறை மீண்டும் முழு மூச்சாக செயல்பட வேண்டும். அதற்கு பாஜக கலை கலாச்சார அணி முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.