ஸ்ரீநகர்: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி. மேலும், இதில் காஷ்மீரை சேர்ந்த மருத்துவர்களுக்கு உள்ள தொடர்பை அறிந்து கவலை கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அரசு கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும். எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர்களின் தாய், தந்தை, சகோதரர், சகோதரி என உறவினர்கள் வசம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொழில்முறை ரீதியானதாக இருக்க வேண்டும். சந்தேக நபர்களின் குடும்பங்களை குற்றவாளிகள் போல நடத்தக்கூடாது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் மிகுந்த துயரத்தை தருகிறது. முறையான விசாரணைக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மருத்துவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அது ஜம்மு காஷ்மீர் மக்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தனருக்கு கவலை தரும். இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணைக்கு அவசியம்” என மெஹபூபா முப்தி வலியுறுத்தி உள்ளார்.
டெல்லி கார் குண்டுவெடிப்பு: டெல்லி – செங்கோட்டை அருகே திங்கட்கிழமை மாலை சுமார் 7 மணி அளவில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாலையில் வெடித்துச் சிதறிய காரை, காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்துள்ளார். குண்டுவெடிப்பில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரும் ஹரியானாவின் அல் ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
அந்த மருத்துவக் கல்லூரியில் சக மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் உமர் முகமது நபி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தனது காரில் டெல்லிக்குள் நுழைந்துள்ளார். போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க கார் இன்ஜின் பகுதியில் அவர் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தார். இனிமேல் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி பதற்றத்தில் டெல்லி செங்கோட்டை அருகே தற்கொலை தாக்குதல் நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.