புதுடெல்லி: டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தீவிரவாதத் தாக்குதல் என்றும் இதன் பின்னணியில் புல்வாமா மருத்துவர் உமர் முகமது இருந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் நேற்றுமுன் தினம் மாலை செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் வாயில் எண் 1 முன் ஹுண்டாய் ஐ20 கார் வெடித்துச் சிதறியது. இதுகுறித்து உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்புகள் முதல்கட்ட விசாரணையை தொடங்கின. இதில் டெல்லியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிந்துள்ளது.
வெடித்து சிதறிய காரில் சக்திவாய்ந்த டெட்டனேட்டர் என்ற வெடிபொருள் இருந்தது தடயவியல் ஆய்வில் தெரிந்துள்ளது. இதுகுறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்தது தீவிரவாதியான மருத்துவர் உமர் முகமது என டெல்லி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கார் டெல்லி எல்லையிலுள்ள பதர்பூர் வழியாக காலை 8.04 மணிக்கு நுழைந்துள்ளது. டெல்லி செங்கோட்டை முன்பு மசூதியின் அருகில் மதியம் 3.19 முதல் மாலை 6.55 வரை நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு அந்த காரை மெதுவாக ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர், 6.55 மணிக்கு போக்குவரத்து சிக்னல் முன்பாக வெடிக்க வைத்துள்ளார். அப்போது முகத்தை மறைக்க உமர் முகக் கவசம் அணிந்திருந்ததும் தெரிந்துள்ளது. காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த இவரது குடும்பத்தாரை போலீஸார் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், டெல்லியின் முக்கிய பகுதியில் கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து தாக்குதல் நடத்த உமர் திட்டமிட்டுள்ளார். ஆனால், அன்றைய தினம் காலை பரீதாபாத்தில் நடந்த திடீர் சோதனையால் தீவிரவாத தாக்குதல் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே உமரின் நண்பரான முஜம்மில் பயன்படுத்திய ஷாகீனின் காரில் ஏகே 47 துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. முஜம்மிலின் பரீதாபாத்தின் வாடகை வீட்டில் 2,900 வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து டெல்லி போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.