தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக சட்டங்களை பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம்

மதுரை: குற்றவியல் சட்டங்களை தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என கருந்து தெரிவித்த உயர் நீதிமன்றம், பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன். இவர் மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சரவணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: ”மனுதாரருக்கும் இளம் பெண்ணுக்கும் 2020 முதல் 2025 வரை உறவு இருந்துள்ளது. மனுதாரர் வழக்கறிஞர். அவர் விளைவுகளை நன்கு அறிவார். இருவரின் உறவு தொடங்கும்போது மனுதாரருக்கு இளம் பெண்ணை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் இருந்ததற்காக எந்த ஆதாரமும் இல்லை. மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69-ன் கீழ் தண்டனை வழங்கும் குற்றமாக கருத முடியாது.

தற்போது திருமணத்துக்கு முந்தைய நெருக்கமான உறவு சாதாரணமாகிவிட்டது. சமகால சமூகத்தில் தனிப்பட்ட உறவுகளின் வரம்புகள் மாறி வருகின்றன. இருவருக்கும் இடையில் நடப்பது இருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் வருகிறது. இந்த உறவு, பாசம், திருமண எதிர்பார்ப்பு அல்லது பரஸ்பர இன்பத்தின் அடிப்படையில் ஏற்படுகிறதா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது.

ஒருவரின் தனிப்பட்ட நடத்தையை ஒழுங்குப்படுத்த அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்ற குற்றவியல் நடைமுறைகளை பயன்படுத்த முடியாது. வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் பாதிப்பு ஏற்படும் போதுதான் நீதிமன்றம் தலையிடுகிறது.

இந்த வழக்கில் மனுதாரர் மற்றும் புகார்தாரர் இருவரும் படித்தவர்கள். இருவரும் உணர்வுபூர்வமாக நெருக்கமான உறவில் இருந்துள்ளனர். இந்த உறவு இருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நடந்துள்ளது. அவ்வாறு இருந்துவிட்டு பின்னர் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள் அடிப்படையில் குற்றவியல் சம்பவமாக சித்தரிக்க யாருக்கும் உரிமையில்லை.

உணர்ச்சிப்பூர்வமான விளைவுகளைத் தீர்க்க அல்லது இருவரின் ஒருமித்த செயல்களால் உருவாகும் தார்மிகச் செயலை குற்றமாக கருத சட்டம் ஒரு கருவி அல்ல. சமீப காலங்களில் இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருகிறது. தானாக முன்வந்து பாலியல் உறவுக்குள் நுழைந்து, பின்னர் ஏமாற்றுதல் அல்லது வாக்குறுதி மீறல் நிகழ்வுகளாகக் காட்டப்படுகின்றன. தனிப்பட்ட தொடர்பு மற்றும் பரஸ்பர தேர்வால் ஏற்பட்ட இத்தகைய செயல்களை குற்றவியல் வழக்காக மாற்ற உத்தரவாதம் அளிக்க முடியாது.

குற்றவியல் சட்டங்களை தனிப்பட்ட அல்லது உணர்ச்சிபூர்வமான தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழி முறையாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது. எனவே மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது”என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.