புதுடெல்லி: ஜேபி இன்ஃபராடெக் லிட். எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான மனோஜ் கவுரை, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
டெல்லி அருகேயுள்ள நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2007 முதல் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜேபி இன்ஃபராடெக் லிட். குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களைக் கட்டும் இந்நிறுவனம், நொய்டாவில் இருந்து ஆக்ரா வரையிலான 165 கிலோ மீட்டர் தொலைவுள்ள ஆறு வழி எக்ஸ்பிரஸ் வழித்தட பரமாரிப்பையும் மேற்கொண்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையிலும் தேசிய பங்குச் சந்தையிலும் இந்நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜேபி விஷ்டவுன் மற்றும் ஜேபி கிரீன்ஸ் எனும் வீட்டு வசதி திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவுகள் துறை வழக்குப் பதிவு செய்து மனோஜ் கவுரிடம் விசாரணை மேற்கொண்டது. மேலும், இந்த வழக்கில் அமலாக்கத் துறையும் விசாரணையை நடத்தி வருகிறது.
இந்தப் பின்னணியில், அமலாக்கத் துறை மனோஜ் கவுரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியிருப்புகள் கட்ட இருப்பதாக ஜேபி இன்ஃபராடெக் லிட் வெளியிட்ட விளம்பரங்களை நம்பி ஆயிரக்கணக்கானோர் வீடுகளை வாங்க முதலீடு செய்துள்ளனர். ஆனால், அந்தப் பணம் கட்டுமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படாமல் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், வீடு வாங்க பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால் அவர்கள் புகார்களை அளித்துள்ளனர். ரூ.14,599 கோடி ஏமாற்றப்பட்ட வழக்கில் மனோஜ் கவுர் கைது செய்யப்பட்டுள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.