புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நடக்கும் காட்டாட்சியை பாஜக வேரோடு அகற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 200+ தொகுதிகளை வசப்படுத்திய ஐக்கிய ஜனதா தளம் – பாஜக இணைந்த என்டிஏ மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்களின் வெற்றி தேவை எனும் நிலையில், என்டிஏ பதிவு செய்திருப்பது வரலாற்று வெற்றியாக கருதப்படுகிறது. அதேவேளையில், 35 இடங்களை வெல்லவே திக்குமுக்காடிய ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸின் மகா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்த வெற்றியை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இசை வாத்தியங்களை இசைத்தும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “இன்றைய வெற்றி கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆம், கங்கை பிஹாரில் இருந்து வங்காளத்திற்குப் பாய்வதால், இந்த வெற்றி வங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடக்கும் காட்டாட்சியை பாஜக உங்களுடன் சேர்ந்து வேரோடு அகற்றும் என்று அங்குள்ள உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன்.
காங்கிரஸ் தனது எதிர்மறை அரசியலில் அனைவரையும் மூழ்கடித்து வருவதை அதன் கூட்டணி கட்சிகள் கூட புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளன. அதனால்தான், பிஹார் தேர்தலின் போது, காங்கிரஸின் தலைவர் பிஹார் தேர்தலில் தன்னுடன் சேர்த்து மற்றவர்களையும் மூழ்கடிக்கப் பயிற்சி செய்கிறார் என்று நான் சொன்னேன். இந்த மேடையிலிருந்தே காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளை நான் முன்பே எச்சரித்திருக்கிறேன். காங்கிரஸ் தான் இதற்கு பொறுப்பு என்று நான் சொன்னேன். காங்கிரஸ் என்பது அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கியை விழுங்கி மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பும் ஒரு ஒட்டுண்ணி” என்று தெரிவித்தார்.