சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி ஏரி பூங்கா அருகில் பிரமாண்டமான அழகுடன், அனைத்து வசதிகளும் அடங்கிய சுமார் ₹3 கோடி செலவில் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது சேலம் ஃபுட் ஸ்ட்ரீட்.
சுமார் 35 அழகிய சிறுசிறு கடைகளுடன், பேவர் ப்ளாக் கற்கள் பொதிக்கப்பட்டுள்ள வளாகம், ஆண்கள்–பெண்கள் என தனித்தனியான கழிவறை வசதிகளுடனும், இரவு நேரங்களை மக்கள் இயல்பு நேரங்களாக மாற்றும் வண்ணம் அமைக்கப்பட்ட அழகிய மின் விளக்குகளுடனும், பள்ளப்பட்டி பகுதிக்கு இன்னொரு அடையாளமாக மாறவிருக்கிறது `சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்’

என்ன சிறப்பு?
கேள்வியோடு உள்ளே சென்றோம் பல கேளிக்கைகள் உள்ளடங்கிய வீதிக்குள். கைகழுவும் இடங்கள் உட்பட தண்ணீர் குழாய்கள், வாகனங்களை நிறுத்துவதற்கான வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பு கருதி பாதுகாவலர் அறையுடன் கூடிய உள் நுழைவு வளைவு ஆகியவற்றை கொண்ட உணவு வீதிக்குள் மனமகிழ்ச்சியுடன் சென்றோம்.
சற்று சுவர் சுற்றி எழுந்திருந்த நிலையிலும், சுத்தமான பகுதியாகவும், சத்தமான வாகன போக்குவரத்துக்கு நடுவிலும் அமைதிநிலையுடன் இருக்கும் பூங்கா அருகே இது அமைந்துள்ளது.
இதுகுறித்து ஏரி பூங்காவில் இருந்த ஒருவரிடம் கேட்டபோது, “இந்த பூங்கா திறப்பு விழாவுக்கு பின்னர் இந்த ஃபுட் ஸ்ட்ரீட் மிகவும் பிஸியாகவும், முக்கியமான டைம் பாஸ் பகுதியாகவும் மாறும்” என்றார்.
மற்றொருவர் கூறுகையில், “இதன் மூலம் அரசுக்கு வருவாய் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் 35 கடைகளிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானம் உயர வாய்ப்புள்ளது. ஆனால் அருகிலுள்ள உணவுக் கடைகளுக்கு சற்று வருவாய் இழப்பும் ஏற்படலாம்” என்றார்.

இதுகுறித்து சூரமங்கலம் பகுதி இளநிலை பொறியாளரை தொடர்பு கொண்டு, கடைகள் ஒதுக்கீடு, வாடகை மதிப்பீடு மற்றும் ஏலம் தொடர்பான தகவல்களை கேட்டபோது, அந்த தகவல்களை வழங்க அவர் தயாராக இல்லை.
தகவல் வழங்கினால் அதையும் சேர்த்து வெளியிடத் தயாராக உள்ளோம்.
காத்திருந்து பார்ப்போம், `சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்’ எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்று!