காரைக்குடி: பகுத்தறிவால் தான் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது என தமிழக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் பிளஸ் 1 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குதல், சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குதல், குழந்தைகள் தினம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி வரவேற்றார்.
இதனையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 5.35 லட்சம் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இதில் 57,000 மாணவிகள், மாணவர்களை விட கூடுதலாக பெறுகின்றனர். இதற்கு அதிக மாணவிகள் பள்ளியில் சேர்ந்து படிப்பது தான் காரணம். இது தான் திராவிட மாடல் அரசின் வெற்றி. அக்காலக்கட்டத்தில் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். படிக்க உரிமை கிடையாது.
அனைத்து பெண்களையும் படிக்க வைத்தது திராவிட இயக்கம். நூறு ஆண்டுகள் போராட்டம், தியாகத்துக்கு பிறகு தான் இந்தநிலையை அடைந்தோம். ஒரு குடும்பத்தின் ஏழ்மை நிலையை போக்க கூடியது கல்வி.
பொருள், பணத்தை மட்டும் கொடுப்பது அல்ல கல்வி, அதோடு நம்பிக்கையையும், அற்றலையும் தருகிறது. அதனால் தான் இந்தியாவிலேயே அதிக திட்டங்களை கல்வித்துறையில் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
மாணவர்கள் சிந்தனை ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். பெரியவர்களை விட அதிகம் சிந்திக்க கூடியவர்கள் குழந்தைகள் தான். சொல்லபோனால், பெற்றோருக்கே குழந்தைகள் தான் ஆசிரியர்கள்.
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தொடர்ந்து பகுத்தறிவை வலியுறுத்தினர். பகுத்தறிவு என்றால் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியை கேட்டு கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் தான் தெளிவான பதில் கிடைக்கும். அதனால் தான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
உலக நாடுகளோடு போட்டியிட கூடிய அளவுக்கு தமிழகத்தை உயர்த்த வேண்டும். அதற்கு, மாணவர்கள் விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். சிந்திக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிகளில் 22 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கப்படுகிறது. தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் 8 லட்சம் கல்லூரி மாணவர்கள் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர். விரைவில் கல்லூரிகளில் இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் ரீல்ஸ் பார்க்கிறோம். ரீல்ஸ் வாழ்க்கை கிடையாது. அதில் வருவது எல்லாம் முக்கால்வாசி பொய் தான். ரியலாக கல்விதான் கை கொடுக்கும்.
கல்வியோடு சேர்ந்து விளையாட்டுக்கும் முக்கியத்தும் கொடுக்க வேண்டும். கல்வியில் முன்னேறினால் குடும்பப் பொருளாதாரம் முன்னேறும். அது மூலம் தமிழகமும் முன்னேறும். ஆசிரியர்கள் உடற்கல்வி பாடவேளையை கடன் வாங்கி மற்ற பாடங்களை நடத்த வேண்டாம். முடிந்தால் மற்ற பாடவேளையையும் உடற்கல்விக்கு கொடுத்து உதவ வேண்டும். மாணவர்களுக்கு படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் 12,500 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், பிற்பட்டோர் நலத்துறை செயலாளர் சரவணவேல்ராஜ், எம்எல்ஏக்கள் தமிழரசி, மாங்குடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.