பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், 25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வென்று கவனத்தை ஈர்த்துள்ளது. சீமாஞ்சல் பகுதியில் ஓர் இடத்தில் ஆர்ஜேடி கட்சி வெல்லாதது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பிஹாரில் இஸ்லாமிய வாக்குகள் உள்ள தொகுதிகளில் ஓவைசியின் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதன் காரணமாக 2020-ஆம் ஆண்டில் சீமாஞ்சல் பகுதியில் ஐந்து இடங்களை அக்கட்சி வென்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 2025 பிஹார் சட்டப்பேரவை தேர்தலிலும் 5 தொகுதிகளில் வென்று மீண்டும் கவனம் பெற்றுள்ளார் ஓவைசி. அராரியா, கதிஹார், கிஷன்கஞ்ச் மற்றும் பூர்னியா ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாஞ்சல் பகுதியில் 24 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மாநிலத்தின் முஸ்லிம் மக்கள்தொகையில் பெரும் பகுதியும் இந்த மண்டலத்தில்தான் உள்ளன. எனவே, இந்த தேர்தலிலும் பிஹாரில் 25 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார் ஓவைசி.
2025 தேர்தலில் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோச்சதமன் மற்றும் பகதூர்கஞ்ச், பூர்னியாவில் உள்ள அமூர் மற்றும் பைசி, அராரியாவில் உள்ள ஜோகிஹாட் ஆகிய 5 இடங்களில் ஓவைசி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இவை அனைத்தும் 2020-இல் அக்கட்சி வென்ற தொகுதிகள் ஆகும். 2020 தேர்தலுக்குப் பின்னர் அசாதுதீன் ஒவைசி கட்சியின் நான்கு எம்எல்ஏக்கள் ஆர்ஜேடி கட்சிக்கு தாவினர். அமூரில் இருந்து வெற்றி பெற்ற அக்தருல் இமான் மட்டுமே கட்சியில் நீடித்தார். இமான் இப்போது தனது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
சீமாஞ்சலில் ஆர்ஜேடி வாஷ் அவுட்: 2020-ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயக கூட்டணி சீமாஞ்சல் பகுதியில் இருந்து 12 இடங்களையும், மகா கூட்டணி ஏழு இடங்களையும், ஓவைசி கட்சி 5 இடங்களையும் வென்றிருந்தது. 2025 தேர்தலில் சீமாஞ்சலில் தேசிய ஜனநாயக கூட்டணி 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் மகா கூட்டணி 2 இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஓவைசி கட்சி 5 இடங்களை வென்றுள்ளது.
கடந்த முறை 8 இடங்களில் வென்ற பாஜக, தற்போது 8 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜேடியுவின் 7 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மகா கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் இரு இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிபிஐ (எம்எல்) மற்றும் ஆர்ஜேடி ஒரு இடத்தையும் கைப்பற்றவில்லை. காலம் காலமாக ஆர்ஜேடியின் கோட்டையாக இருந்து வந்தது சீமாஞ்சல் பகுதி. ஆனால் இப்போது அப்பகுதியில் ஓர் இடத்தில் கூட அக்கட்சி வெல்லவில்லை.