புதுடெல்லி,
பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
மக்களின் மனதை திருடியிருக்கிறோம். மாபெரும் வரலாற்று தீர்ப்பை மக்கள் அளித்துள்ளனர். வரலாற்று வெற்றி பெற்றுள்ள இந்த நேரத்தில் ஜே.பி. கர்பூரி தாகூரை வணங்குகிறேன். இனி ஆர்.ஜே.டி அரசு திரும்ப வரப்போதில்லை. பீகார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டனர். அவர்கள் முஸ்லீம், யாதவர்கள் கூட்டணியால் வெல்ல முயன்றார்கள், நாம் பெண்கள், இளைஞர்கள் வாக்குகளால் அவர்களை வீழ்த்தி உள்ளோம்.
பீகாரில் இனி ஒருபோதும் காட்டாட்சி வராது. காட்டாட்சியை ஒழிக்க MY பார்முலாவை உருவாக்கினேன். M என்றால் பெண்கள், Y என்றால் இளைஞர்கள். 2010-க்கு பின் என்.டி.ஏ -வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. கூட்டணி தலைவர்களின் கடுமையான உழைப்பால் வெற்றி. பீகாரின் சாமானிய மக்களுக்கும் கூட்டணி தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அனைத்து கட்சிகளும் எஸ்.ஐ.ஆர். க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். பீகாரில் எஸ்.ஐ.ஆர்.க்கு இளைஞர்கள் வலிமை அளித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி கணக்குகளை பீகார் மக்கள் துவம்சம் செய்தனர்.பீகாரில் முதல்முறையாக வன்முறையின்றி தேர்தல் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியிடம் எந்த தொலைநோக்கு சிந்தனையும் இல்லை.பல்வேறு மாநிலங்களில் காங். ஆட்சியில் இருந்து வெளியேறி வருகிறது.
ஜனநாயகத்திற்கு பிழையற்ற வாக்காளர் பட்டியல் அவசியம். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் அனைவரும் பங்கேற்க வேண்டும். தேர்தல் ஆணையம் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. அமைதியான தேர்தலை நடத்திய ஆணையம், அதன் ஊழியர்கள், பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகள். நக்சலைட்டு பாதிப்பு அதிகமிருந்த பகுதிகளில் அச்சமின்றி மக்கள் வாக்களிக்க ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. நாட்டு துப்பாக்கி ஆட்சி இனி பீகாரில் வரக்கூடாது என்று மக்கள் வாக்களித்துள்ளனர். மாபெரும் வரலாற்று தீர்ப்பை அளித்துள்ள பீகார். மக்கள் நலனுக்கு என்.டி.ஏ கூட்டணி பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.