பாட்னா: அரசியலையும் தனது குடும்பத்தையும் விட்டு விலகுவதாக லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 2020-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தியாக திகழ்ந்த அந்த கட்சி, இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சி வழிநடத்திய மகா கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. முன் எப்போதும் இல்லாத வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.
இந்த தேர்தல் முடிவு, ராஷ்ட்ரிய ஜனதா தொண்டர்களை மிகவும் சோர்வடையச் செய்துள்ள நிலையில், அக்கட்சியின் முதல் குடும்பத்திலும் பிரச்சினை வெடித்துள்ளது. லாலு பிரசாத் யாதவின் மகளும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவருமான ரோகிணி ஆச்சார்யா, கட்சியில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்பட்டு வந்தார். இந்த தேர்தலின்போது அவர் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், கட்சியில் இருந்தும், தனது குடும்பத்தில் இருந்தும் விலகுவதாக ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நான் அரசியலைவிட்டு வெளியேறுகிறேன். மேலும், எனது குடும்பத்தில் இருந்தும் விலகுகிறேன். சஞ்சய் யாதவும், ரமீஸும் இதைத்தான் என்னிடம் கேட்டார்கள். எல்லா பழிகளையும் நான் ஏற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் யாதவ், தேஜஸ்வி யாதவின் நம்பிக்கைக்குரியவராக கருதப்படுகிறார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ரமீஸ், தேஜஸ்வி யாதவின் நீண்டகால நண்பராக இருந்து வருகிறார். எனினும், இவர்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்து ரோகிணி விரிவாக தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், இவ்விருவரும் இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
ரோகிணி ஆச்சார்யாவின் பின்னணி: லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா, எம்பிபிஎஸ் பட்டம் பெற்று மருத்துவராக உள்ளார். லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய நண்பரான ராய் ரன்விஜய் என்பவரின் மகனான சாம்ரேஷ் சிங் என்பவருக்கும் இவருக்கும் கடந்த 2022 இல்-திருமணம் ஆனது. ஆச்சார்யாவின் கணவர் ஒரு மென்பொருள் பொறியாளர். 20 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் வாழும் ரோஹிணி, அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
லாலு பிரசாத் யாதவ், உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது அவரை கவனித்துக் கொண்டவர் ரோகிணி. மேலும் தந்தை லாலுவுக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்து தனது பாசத்தைக் காட்டி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றவர்.