பிஹார் முதல் டெல்லி வரை ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை: யார் இந்த நிதிஷ் குமார்?

‘நிதிஷ் குமார் ஒரு மண் குதிரை’ – 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் மகாகட்பந்தன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் அவர் கைகோர்த்தபோது பரவலாக முன்வைக்கப்பட்ட விமர்சனம் இது. ஆனால் ஜோதி பாசு, நவீன் பட்நாயக் போன்றோர் செய்த சாதனையை (தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாநில முதல்வர் பதவி) சமன் செய்து ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்’ என தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளார் நிதிஷ் குமார்.

10-வது முறையாக முதல்வர் பதவி! – முதன்முதலில் இவர் மார்ச் 3, 2000 அன்று முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் 2005 தேர்தலில் பெரும்பான்மை வெற்றியோடு முதல்வர் ஆனார். கடந்த 2010-ல் நிதிஷ் 3-வது முறை முதல்வரானார். கடைசி 2 ஆட்சியிலும் நிதிஷுக்கு பாஜக முழு ஆதரவளித்தது. பின்னர் 2014-ல் பாஜக.வில் இருந்து நிதிஷ் பிரிந்தார். லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்தவர் 2015-ல் மகத்தான வெற்றி பெற்றார். இதில், முதல்வராக நிதிஷ் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

கடந்த 2017-ல், அவர் மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் என்டிஏ.வுக்கு திரும்பினார். 2020-ல் மறுபடியும் முதல்வரான நிதிஷ் குமார், 2022-ல் மீண்டும் என்டிஏ.வில் இருந்து வெளியேறி ஆர்ஜேடி, காங்கிரஸின் மெகா கூட்டணி சார்பில் முதல்வரானார்.

இதற்கிடையில் மே 24, 2024 முதல் 278 நாட்கள் ஜேடியு ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்வராக இருந்தார். ஜனவரி 2024-ல், நிதிஷ் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுடன் இணைந்து, 9-வது முறையாக முதல்வரானார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்றதால் 10-வது முறையாக முதல்வர் பொறுப்பேற்கிறார்.

கர்ப்பூரி தாக்குரின் வழிவந்தவர்… – பிஹார் அரசியலில் சமூக விடுதலை என்ற முக்கிய கோட்பாட்டை முன்வைத்த முகம் கர்ப்பூரி தாக்குர்.

பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டம் பிதோஜ்கியா கிராமத்தில் 1924 ஜனவரி 24-ம் தேதி பிறந்தார் கர்ப்பூரி தாக்குர். மாணவ பருவத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று 26 மாதங்கள் சிறையில் இருந்தார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1952-ல் முதல்முறையாக பிஹாரின் தேஜ்பூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கர்ப்பூரி தாக்குர்

கடந்த 1970-1971 மற்றும் 1977-1979 என 2 முறை பிஹார் முதல்வராக பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பிஹாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய அவர், மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்டார். 1988 பிப்ரவரி 17-ம் தேதி காலமானார்.

பிஹாரின் லாலு பிரசாத் யாதவாகட்டும், நிதிஷ் குமாராகட்டும் கர்ப்பூரி தாக்குர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள்தான். அதனால் தான் நிதிஷ் இந்தத் தேர்தலுக்கு முன்னர் அறிவித்த மகளிருக்கான நிதியுதவித் திட்டம் கர்ப்பூரி தாக்குரின் சமூக சிந்தனைக்கு சமர்ப்பணம் என்று ஜேடியுவினரால் கொண்டாடப்பட்டது.

1951-ல் பிறந்து, 1977-ல் பிஹாரில் காங்கிரஸ் எதிர்ப்பு, ஜனதா அலை அதிருப்தி நிலவிய காலத்தில் தேர்தல் அரசியலில் நுழைந்தவர் நிதிஷ் குமார். ராம் மனோகர் லோஹியாவின் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்.

நிதிஷ் எனும் ஆளுமை: இவ்வாறாக, சோஷலிஸ சிந்தனைகளோடு தன்னை செதுக்கிக் கொண்ட நிதிஷ் மாநில அரசியலில் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் தனது இருப்பையும், அவசியத்தையும் நிலைநாட்டியுள்ள நிதிஷ் குமாரின் அரசியல் ஆளுமை கவனத்துக்கு உரியது.

கடந்த 2006-ம் ஆண்டு பாஜக – ஜேடியு கூட்டணி 243 தொகுதிகளில் 206 தொகுதிகளைக் கைப்பற்றியது. அதன்பின்னர், இதோ இந்த 2025 தேர்தலில் 202 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியுள்ளது. வரலாற்றை மீண்டும் படைத்துள்ளார் நிதிஷ் குமார்.

பிஹார் அரசியல் களம் சாதி, மத அரசியலால் பின்னப்பட்டது. அங்கு முஸ்லிம்கள், யாதவ வாக்காளர்கள் 32%. இந்த வலுவான வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தான் அங்கு கூட்டணிகளுக்குள் தொகுதிப் பங்கீடு முதல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு வரை நடைபெறும்.

கள யதார்த்தம் இப்படியிருக்க, பிஹார் மக்கள் தொகையில் வெறும் 3% பேரை மட்டுமே கொண்ட குர்மி சமூகத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் சாதி, மத வரையறைகளைக் கடந்து சாதித்திருக்கிறார் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியது. அவருடைய அந்த பலம்தான் பிஹாரில் மட்டுமல்ல, இன்று டெல்லியில் மத்தியில் உள்ள பாஜக ஆட்சிக்கு ஒரு தூணாகவும் இருந்து கொண்டிருக்கிறது.

விவசாய பின்புலம் கொண்ட குர்மி சமூகத்தினர் பிஹாரில் மட்டுமல்ல, உபி, ஒடிசா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் எனப் பல மாநிலங்களை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வலுவான இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அரசியலில் ட்ரெண்ட் செட்டர்’ – நிதிஷ் குமாரின் அரசியல் நிபுணத்துவம் பற்றி தேர்தல் அரசியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், “அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை என்பர். அதுபோலத்தான் நிதிஷுக்கு கூட்டணி மாற்றங்களும். சில நேரங்களில் அது அப்பட்டமான துரோகமாகக் கூட தோன்றலாம். ஆனால், அந்தத் துரோகங்களையும் கூட அரசியலாக்கும் தந்திரவாதி நிதிஷ் குமார்.

பாஜக கூட்டணியிலிருந்து விலகி மகாகட்பந்தனில் ஐக்கியமானது, பின்னர் அதிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தது வரை எல்லாவற்றிலும் தனக்கான முக்கியத்துவத்தை நிலைநாட்டும் வித்தை நிதிஷுக்கு கைவந்த கலை. இண்டியா கூட்டணி என்ற ஒன்றை உருவாகக் காரணமாக இருந்தவர்தான் இன்று பிஹாரில் இண்டியா கூட்டணியை துடைத்தெறிந்துள்ளார். நீங்கள் வேண்டாம் என்று சொன்ன பாஜகவில்தான் இன்று மாநிலக் கூட்டணியிலும், மத்திய கூட்டணியிலும் ‘நான் எவ்வளவு முக்கியம் தெரியுமா?’ என்று நிலைநாட்டியுள்ளார்.

நரேந்திர மோடி என்பதன் சுருக்கமான ‘நமோ’ என்ற நாமத்துக்கு மாற்றாக, இப்போது தனது பெயரை முதலாவதாகவும், மோடியின் பெயரை இரண்டாவதாவும் விளிக்கக் கூடிய வகையிலான ‘நிமோ’ என்ற நாமத்தை உருவாக்கியதில் இருந்தே அவரது அரசியல் சாணக்கியத்தனத்தின் உச்சத்தை உணரலாம். ஆக… காதலிலும், போரிலும் மட்டுமல்ல… அரசியலிலும் ‘ஆல் இஸ் ஃபேர்’ எனும் ‘எல்லாம் நியாயம் தான்’ என்ற ட்ரெண்டை செட் செய்தவர் நிதிஷ் குமார்” என்றார்.

‘சுசாசன் பாபு’ (Sushashan Babu) நிதிஷ் குமார்: பிஹாருக்கு ஓர் அடையாளம் இருந்தது. எங்கு திரும்பினும் வறுமை, சாலை, மின்சாரம் குடிநீர் என்று எந்த அடிப்படை வசதியும் இல்லாமை, கல்வியறிவில் பின்தங்கிய நிலை, க்ரைம் ரேட் அதாவது ஒரு லுங்கிக்கு கூட கொலை நடக்கும் என்றளவுக்கு மோசமான கிரிமினல்களின் அட்டூழியம், ஆதிக்க சாதிகளுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையேயான மோதல்கள் கொண்டதே பிஹார் என்பதுதான் அந்த அடையாளம்.

அதை 15 ஆண்டு காலம் ஆட்சியிலிருந்த ஆர்ஜேடி மாற்ற முயற்சிக்கவே இல்லை என்ற விமர்சனமும் உண்டு. அதனால் தான் ஆர்ஜேடி காட்டாட்சி என்று விமர்சிக்கப்படுகிறது. அதை மாற்ற முயற்சித்து, ஓரளவுக்கு வெற்றியும் பெற்ற பெருமை நிதிஷ் குமாருக்கு உண்டு. அதனால்தான் அவரை வாஞ்சையோடு ‘சுசாசன் பாபு’ என்று அழைக்கின்றனர்.

ஈர்ப்பரசியலில் வித்தகர்! – பிஹார் தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னர் மாநிலத்தில் எதிர்ப்பலைகள் வீசத் தொடங்கியது என்பது மறுப்பதற்கு இல்லை. அதைத்தான் அறுவடை செய்ய மகா கூட்டணியும் மெகா ப்ளான் போட்டது. ஆனால், அதையும் தாண்டி நிதிஷ் மீது பிஹாரிக்கள் நம்பிக்கை வைத்ததற்கு சில காரணங்களை பட்டியலிடலாம்.

இந்தப் பட்டியலில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இன்னொன்று பிஹாரில் தலைவிரித்தாடிய கிரிமினல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து க்ரைம் ரேட்டை கணிசமாகக் குறைத்தது.

இதுதவிர, தேர்தல் நெருங்கும் வேளையில் மகளிர், இளைஞர்களைக் குறிவைத்து நிதிஷ் அறிவித்த திட்டங்கள் நல்ல பலன் கொடுத்துள்ளது. ரூ.10 ஆயிரம் நிதியுதவித் திட்டத்தில் 1.21 கோடி பெண்கள் பலன் பெற்றதாகத் தெரிகிறது. 125 யூனிட்கள் வரை இலவச மின்சாரம், முதியோர் பென்ஷன் ரூ.1,100 ஆக உயர்வு ஆகியன நிதிஷின் இமேஜுக்கு விஸ்வரூபம் கொடுத்தது.

இவை எல்லாவற்றையும் பற்றி தேர்தல் பிரச்சாரங்களில் வாக்காளர்களிடம் உரக்கச் சொன்னார் நிதிஷ். ஒரு துல்லிய தாக்குதலுக்கு நிகரான துல்லியப் பிரச்சாரம் அது. பிஹாரில் பூஜ்ஜியத்துடன் மண்ணைக் கவ்விய பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் நிதிஷிடம் கற்றுக் கொள்ள வேண்டிய உத்திகள் ஏராளம் என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பிரச்சாரங்களை அமைந்தது. நிதிஷ் குமார் களத்தில் ஓர் ஈர்ப்பரசியல் வித்தகர்.

இதைத்தான், “நலத் திட்ட விநியோகம், சமூக – கொள்கைக் கூட்டணிகள், நாம் சொல்ல வேண்டிய அரசியல் ரீதியான செய்தியைத் தெளிவாக மக்களிடம் சொல்வது, இறுதி வாக்குப் பதிவாகும் வரை அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றுவது எனப் பலவற்றையும் ஒரு தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதிபலித்திருக்கிறார் என்று கூறலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.