பாட்னா,
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பீகார் சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றி தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டது. இந்த தேர்தலில், தேஜஸ்வி யாதவ் தோற்ற போதும், அவருடைய கட்சி சாதனை ஒன்றை செய்துள்ளது. அது அதிக வாக்கு சதவீதம் ஆகும்.
பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யூ.) ஆகிய கட்சிகளை இந்த விசயத்தில் பின்னுக்கு தள்ளி ராஷ்டீரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) அதிக வாக்கு சதவீதம் (23 சதவீதம்) கொண்டுள்ளது. இது பா.ஜ.க. (20.08) பெற்ற வாக்கு சதவீதத்தினை விட 2.92 சதவீதம் மற்றும் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விட 3.75 சதவீதம் அதிகம் ஆகும்.
எனினும், கடந்த தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியானது 23.11 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. அப்போது, 144 வேட்பாளர்கள் போட்டியிட்டு, 75 இடங்களை கைப்பற்றி இருந்தனர். அது வேறெந்த கட்சியையும் விட கூடுதல் எண்ணிக்கையாகும்.
இந்த முறை 141 வேட்பாளர்கள் போட்டியிட்டு, வெறும் 25 இடங்களையே அக்கட்சி கைப்பற்றியது. இது 2-வது படுமோசம் வாய்ந்த தோல்வியாகும். இதற்கு முன்னர், 2010-ம் ஆண்டில் பெற்ற 22 இடங்களை அக்கட்சி கைப்பற்றி இருந்தது.
பீகார் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி 202 தொகுதிகளை வென்றுள்ளது. அவற்றில், பா.ஜ.க. 89 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களையும் வென்றுள்ளது. மத்திய மந்திரி சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 19, மத்திய மந்திரி ஜீதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, ராஜ்ய சபை எம்.பி. உபேந்திரா குஷ்வஹாவின் ராஷ்டீரிய லோக் மோர்ச்சா 4 இடங்களை கைப்பற்றி உள்ளன.