புதுடெல்லி,
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களிலும், தனியாக களம் கண்ட ஓவைசி கட்சி 5 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த தேர்தலில் 19 தொகுதிகளை கைப்பற்றியது. தற்போது 13 இடங்களை இழந்தது.
இந்த நிலையில், பீகாரில் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று அவசர ஆலோசனை நடத்தியது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனக கார்கே வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், ராகுல்காந்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பீகாரில் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசவில்லை. பின்னர், அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
”பீகார் தேர்தல் முடிவு நம் அனைவருக்கும் நம்பமுடியாதது. இது காங்கிரசுக்கு மட்டுமல்ல. முழு பீகார் மக்களும் இதை நம்பவில்லை. எங்கள் கூட்டணி கட்டியினரும் கூட இதை நம்பவில்லை. நாங்கள் அவர்கள் அனைவருடனும் விவாதித்தோம். அவர்கள் அதை நம்பவில்லை. ஏனென்றால், ஒரு அரசியல் கட்சிக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதம். இது இந்திய வரலாற்றில் நடக்கவில்லை. நாங்கள் முழுமையாக ஆய்வு செய்கிறோம். பீகார் முழுவதும் தரவுகளை சேகரித்து வருகிறோம். ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள், உண்மையை வெளியிடுவோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.