புதுடெல்லி: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா டெல்லிக்கு பயணமாக சென்றுள்ளார். இந்த பயணத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் கோரியும், மேகதாது அணை விவகாரம் குறித்தும் மத்திய அரசின் உதவியை அவர் கோரவுள்ளதாக தகவல்.
இந்நிலையில், சனிக்கிழமை அன்று டெல்லியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். “அமைச்சரவை மாற்றம் குறித்து எங்கள் அமைச்சர்கள் யாரும் எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடியை இன்று நான் சந்தித்திருக்க வேண்டும். பிஹார் தேர்தல் காரணமாக அவரை சந்திக்க முடியவில்லை. வரும் திங்கட்கிழமை அன்று அவரை சந்திப்பேன் என்று நம்புகிறேன்.
ராகுல் காந்தியை சந்தித்து பேசினேன். பிஹார் தேர்தல் குறித்து அவருடன் பேசினேன். அவர் எங்கள் தலைவர். இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஊக்கம் கொடுத்தோம். அது குறித்து அவர் கவலை கொள்ளவில்லை என தெரிவித்தார். உற்சாகத்தை இழக்க வேண்டாம் என அவரிடம் நாங்கள் தெரிவித்தோம்” என சித்தராமையா தெரிவித்தார்.
முன்னதாக, கர்நாடகாவில் வரும் நவம்பரில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதை தொடர்ந்து சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். அப்போது முதல்வர் பதவி கேட்ட டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் மேலிடம் துணை முதல்வர் பதவி வழங்கியது.