சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவ மனைகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா முடிகொண்டானைச் சேர்ந்த என்.ராஜசேகரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கடந்த அதிமுக ஆட்சியில் ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், அரியலூர், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் கட்டப்பட்டன. இதைக் கட்ட மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்கியுள்ளன.
முன்னாள் முதல்வரும், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான பழனிசாமியின் பதவிக்காலத்தில் தான் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. ஆனால் இவை கட்டப்பட்டதில் தேசிய மருத்துவ ஆணைய விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய கோடிக்கணக்கான தொகை தவறாக பயன்படுத்தப்பட்டு, முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கடந்த 2021 ஜூலை 7-ல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதையடுத்து கடந்த 2022-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கில் எனது புகார் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்ததையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் முதல்வரான பழனிசாமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும்.
அதேபோல கடந்த 2023-ம் ஆண்டு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சிபிஐ நேரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம் என்ற அனுமதியை தமிழக அரசு வாபஸ்பெற்றது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.