ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ், 2025-ம் ஆண்டு சந்தித்த படுதோல்விக்கு பிறகு, 2026-ம் ஆண்டுக்கான ஏலத்திற்கு முன்பாக தனது அணியில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய தயாராகி வருகிறது. இதன் முதல் படியாக, நியூசிலாந்தின் நட்சத்திர வீரர்களான டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரை அணியிலிருந்து விடுவிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த அதிரடி முடிவு, அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source

2025-ம் ஆண்டின் ஏமாற்றம்
கடந்த 2025-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு ஒரு மறக்க முடியாத மோசமான பருவமாக அமைந்தது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த சென்னை அணி, வெறும் நான்கு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தது. அணியின் இந்த படுதோல்விக்கு, முக்கிய வீரர்கள் சோபிக்க தவறியதே முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக, பெரும் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் ஆட்டம் அணிக்கு கைகொடுக்கவில்லை.
கடந்த தொடரில், ரச்சின் ரவீந்திரா 8 இன்னிங்ஸ்களில் விளையாடி, ஒரு அரைசதம் உட்பட 191 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது சராசரி 27.28 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 128.18 ஆகவும் இருந்தது. மறுபுறம், டெவான் கான்வே 6 இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்களுடன் 156 ரன்கள் மட்டுமே எடுத்தார்; அவரது சராசரி 26.00 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 131 ஆக இருந்தது. நட்சத்திர வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியதால், அணி நிர்வாகம் இந்த கடினமான முடிவை எடுத்துள்ளது.
இளம் வீரர்கள் மீது புதிய நம்பிக்கை
கான்வே மற்றும் ரச்சினை விடுவிக்கும் அதே வேளையில், கடந்த தொடரில் மாற்று வீரர்களாகக் களமிறங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இளம் வீரர்கள் மீது சிஎஸ்கே நிர்வாகம் தனது முழு நம்பிக்கையையும் வைத்துள்ளது. குறிப்பாக, காயமடைந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாகக் களமிறங்கிய ஆயுஷ் மத்ரே, 7 இன்னிங்ஸ்களில் 188.97 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் 240 ரன்கள் குவித்தார். அதேபோல், தென்னாப்பிரிக்காவின் இளம் புயல் டிவால்ட் பிரெவிஸ் 6 இன்னிங்ஸ்களில் 180.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 225 ரன்கள் விளாசினார். மற்றொரு வீரரான உர்வில் படேல், 3 போட்டிகளில் 212 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்த இளம் வீரர்களின் அதிரடி மற்றும் பயமற்ற ஆட்டம், அணிக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்ததால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மெகா டிரேட்
அணியில் இருந்து முக்கிய வீரர்கள் விடுவிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் டிரேட்ம் நடந்து வருகிறது. சென்னை அணியின் இரண்டு முக்கிய தூண்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, அந்த அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை சென்னை அணி Trade செய்துள்ளது. எம்.எஸ். தோனிக்கு பிறகு, கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் இடத்திற்கான சரியான வீரராக சஞ்சு சாம்சன் இருப்பார் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. இந்த டிரேட் சென்னை அணியின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் ஒரு முக்கிய முடிவாக அமையும். தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தை நோக்கி ஒரு புதிய அணியை கட்டமைக்கும் முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிரமாக இறங்கியுள்ளது என்பது தெளிவாகிறது.
About the Author
RK Spark