இது போன்ற பிட்ச்சில் சச்சின், விராட் கோலியால் கூட… – இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் ரன் குவிக்க முடியாமல் திணறின. முதல் இன்னிங்சில் முறையே தென் ஆப்பிரிக்கா 159 ரன்களும், இந்தியா 189 ரன்களும் அடித்தன. பின்னர் 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து 124 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 93 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகள் கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணியின் இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமாக பிட்ச் உருவாக்கப்பட்டதே காரணம் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது போன்ற பிட்ச்சில் சச்சின், விராட் கோலி வந்தால் கூட இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியாது என்று முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “சமீபத்தில், இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியது. இரு அணிகளும் அற்புதமாக விளையாடின. அனைவரும் அவர்களைப் பாராட்டினர். அங்கு விளையாடிய பிட்ச்களின் தரம் மற்றும் அவர்கள் போராடி வென்ற விதம், டெஸ்ட் கிரிக்கெட் எவ்வளவு சிறந்தது என்பதைக் காட்டுகிறது. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்.

ஆனால் இங்கு, பிட்ச் மிகவும் மோசமாக உள்ளது; ஆனால் இங்கே பந்தை போட்டால் அது எங்கேயோ சுழன்று செல்லும் அளவுக்கு பிட்ச் தரமற்றதாக இருக்கிறது. அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக தெரியவில்லை. இப்படிப்பட்ட பிட்ச்களில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலியால் கூட தாக்குப்பிடிக்க முடியாது.

ஏனெனில் ஒரு பந்து கீழே வருகிறது. மற்றொன்று எழும்பி அல்லது திரும்பி வந்து உங்களது விக்கெட்டை பறிக்கிறது. இது போன்ற பிட்ச்களில் எந்த டெக்னிக்கை வைத்தும் உங்களால் விளையாட முடியாது. எனவே, இது இனி திறமை சம்பந்தப்பட்டதல்ல. பிட்ச்தான் வேலை செய்கிறது.

இது சமீப காலமாக நடந்து வருகிறது. இதுபோன்ற நிலைமைகளை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. என் கருத்துப்படி, இது சரியாகப் போகவில்லை. இது பரிதாபமானது மற்றும் முழு அபத்தம். டெஸ்ட் கிரிக்கெட்டை ஒரு பரிகாசமாக ஆக்கிவிட்டனர்” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.