மதுரா,
ஜபல்பூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் ஸ்ரீதம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இருந்து பேசிய அந்நபர், ரெயிலின் பொது பெட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இதுபற்றி ரெயில்வே நிலைய இயக்குநர் என்.பி. சிங் கூறும்போது, வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது.
இதன்பின்னர், மதுரா ஜங்சனுக்கு ரெயில் வந்ததும் முழுமையாக வெடிகுண்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. பெட்டியின் இருக்கை மற்றும் பயணிகளின் உடமைகளில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதன்பின்னர் ரெயில் டெல்லி நோக்கி சென்றது என அவர் கூறினார். இதுபற்றி அறிந்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்ததும் நிம்மதி அடைந்தனர்.