புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தான் போட்டியிட்ட ரகோபூர் தொகுதியில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
தேஜஸ்விக்கு மொத்தம் 1,18,597 வாக்குகள் கிடைத்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த சதீஷ் குமார் யாதவுக்கு 1,04,065 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
அதேநேரம் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் சஞ்சல் குமார் வெறும் 3,086 வாக்குகளை மட்டுமே பெற்றார். லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துக்கு மிகவும் பாதுகாப்பான கோட்டையாக ரகோபூர் தொகுதி உள்ளது. இங்கு இவர்களது குடும்பத்தினருக்கு செல்வாக்கு அதிகம். அதனால்தான், கடந்த தேர்தல்களில் ராப்ரி தேவி, லாலு பிரசாத் யாதவ் இந்த தொகுதியில் பலமுறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து தேஜஸ்வி இத்தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேஜஸ்வி 38,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஆனால், இந்த முறை வெறும் 14,000 வாக்குகளில் மட்டுமே அவர் வெற்றி சாத்தியமாகியுள்ளது. இது, தேஜஸ்வியின் செல்வாக்கு அத்தொகுதியில் குறைந்து வருவதை எடுத்துக்காட்டுவதாக அரசியல் திறனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.