“நான் பேட்டிங் செய்தாலே அம்மா ஹாப்பி ஆகிடுவாங்க; ஆனால் அப்பா" – மனம் திறக்கும் சூர்யவன்ஷி

இந்திய அணிக்குள் என்னை எப்போது சேர்க்கப்போகிறீர்கள் என்கிற வகையில் நாளுக்கு நாள் தனது அதிரடி ஆட்டத்தை கூட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.

13 வயதில் 19 வயத்துக்குட்பட்டோர் இளையோர் டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் (58 பந்துகளில்), 14 வயதில் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக இரண்டாவது சதம் (35 பந்துகளில்) என இளம் வயதிலேயே சாதனைகளைக் குவித்திருக்கிறார்.

Vaibhav Suryavanshi
Vaibhav Suryavanshi

இப்போது மேலும் ஒரு சாதனையாக, கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் இந்தியா ஏ அணியில் 32 பந்துகளில் சதமடித்திருக்கிறார்.

வைபவ் சூர்யவன்ஷி மொத்தமாக இப்போட்டியில் 42 பந்துகளில் 144 ரன்கள் அடித்திருக்கிறார்.

இந்த சதத்தின் மூலம், டி20 போட்டியில் அதிவேக சதமடித்த இந்தியர் வீரர் என்ற ரிஷப் பண்ட்டின் (2018, சையது முஷ்டாக் அலி தொடரில் 32 பந்துகளில் சதம்) சாதனையை சமன் செய்திருக்கிறார்.

இந்த நிலையில், தான் இரட்டைச் சதம் அடித்தால்கூட தன் தந்தை திருப்தியடைய மாட்டார் என வைபவ் சூர்யவன்ஷி கூறியிருக்கிறார்.

பி.சி.சி.ஐ ஷேர் செய்திருக்கும் வீடியோவில் வைபவ் சூர்யவன்ஷி, “என் தந்தை ஒருபோதும் எனது ஆட்டத்தில் திருப்தியடைந்ததில்லை. நான் இரட்டைச் சதம் அடித்தால் கூட திருப்தியடைய மாட்டார். இன்னும் பத்து ரன்கள் எடுத்திருக்கலாம் என்றுதான் கூறுவார்.

ஆனால் நான் சதம் அடித்தாலும் சரி, டக் அவுட் ஆனாலும் சரி, நான் பேட்டிங் செய்வதைப் பார்த்தாலே என் அம்மா மகிழ்ச்சியாக இருப்பார். தொடர்ந்து நன்றாக விளையாடு என்று மட்டுமே சொல்வார்” என்று கூறினார்.

மேலும் தனது ஆட்டம் குறித்து பேசிய வைபவ் சூர்யவன்ஷி, “நான் எதையும் பெரிதாக முயற்சிப்பதில்லை. சிறுவயதிலிருந்து பயிற்சி செய்து வருவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். கடின உழைப்பில் கவனம் செலுத்துகிறேன். அதை மைதானத்தில் என் ஆட்டத்தில் கொண்டு வர முயற்சிக்கிறேன்.

நான் எதாவது வித்தியாசமாக செய்ய முயற்சித்தால் அணிக்கு அது பயன் தராது, தனிப்பட்ட முறையில் எனக்கும் அது உதவாது” என்று கூறினார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.