போர் கைதிகள் பரிமாற்ற பணியில் உக்ரைன்… அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

கீவ்,

உக்ரைன் நாட்டுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன் ரஷியா போர் தொடுத்தது. தொடக்கத்தில் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் படைகள் மீட்டன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி ஆகியவற்றை செய்து வருகின்றன.

ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி விட்டனர்.

இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், ரஷியாவோ போரை நிறுத்தும் முடிவுக்கு வரவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ரஷியாவுடன் கைதிகள் பரிமாற்றத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. போர் கைதிகளை திரும்ப பெறுவதற்கான பல கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் உதவியுடன் ஆலோசனைகள் நடந்து வருகின்றன என உக்ரைனின் தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சிலின் செயலாளர் ரஸ்டெம் உமரோவ் கூறியுள்ளார்.

இதன்படி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் போர் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்த இருதரப்பினரும் ஒப்புதல் அளித்துள்ளனர் என்றார். இதன் அடிப்படையில், 1,200 உக்ரைனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். எனினும், இதுபற்றி ரஷியா உடனடியாக எதுவும் தெரிவிக்கவில்லை.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.