புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் புதுச்சேரியில் சுட்டெரித்தது. இச்சூழலில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது, அவ்வப்போது மழையும் பெய்தது. இதனிடேயே வங்கக் கடலில் அக்டோபர் 27-ம் தேதி மோந்தா புயல் உருவானது. இந்தப் புயல் புதுவையை தாக்கும் என வானிலை மையம் எச்சரித்தது. ஆனால் புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தது.
இருப்பினும், புதுவை மற்றும் புதுவையை சுற்றி உள்ள தமிழகப் பகுதிகளில் கன மழை பெய்தது. புதுவையிலும் கன மழை கொட்டியது. இதனால் ஏரி, குளங்களில் வெள்ள நீர் நிரம்பியது. அதே நேரம் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பெய்த கன மழையால் தென் பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டது. புதுவையில் உள்ள 26 படுகை அணைகளும் நிரம்பின.
நவம்பர் மாத தொடக்கத்தில் மழை இல்லை. பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்தது. ஆனால், இடையில் சில நாட்கள் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் சில நாட்களாக மழை அவ்வப்போது பொழிந்தது. நேற்று அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழை பொழிய தொடங்கியது.
இந்தச் சூழலில், புதுச்சேரி ஆட்சியரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை மைய தலைவருமான குலோத்துங்கன் கூறுகையில், ‘வடகிழக்கு பருவ மழையின் தொடர்ச்சியாக, வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) கன மற்றும் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் காற்று மணிக்கு 55 கி. மீ. வரை வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதுவை பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படியும் தேவை இருந்தாலன்றி வெளியே வர வேண்டாம். அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின் பற்றுங்கள். புகார்களை இலவச அழைப்பு எண்களான 1077, 1070, 112 அல்லது 94889 81070 என்கிற எண்ணில் வாட்ஸ்அப் தகவல் ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.