மதுரை: பெண் வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வருங்காலத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்கள் சங்கம் (எம்பிஏ) சார்பில், நீதித்துறை தேர்வுக்குத் தயாராகி வரும் இளம் வழக்கறிஞர்களுக்கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் எம்.கே.சுரேஷ் தலைமை வகித்தார். செயலர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது: கீழமை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்று பிரித்துப் பார்க்காமல், அனைத்தையும் நீதி வழங்கும் அமைப்புகளாக கருத வேண்டும். தற்போது பெண் வழக்கறிஞர்கள் அதிகரித்து வருகின்றனர்.
இதனால், தமிழகம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீதிபதிகள் தேர்வில் பெண்கள் அதிகமானோர் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வருங்காலத்தில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள், நீதிபதிகளாக தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
நீதித்துறை தேர்வுக்கு இளம் வழக்கறிஞர்கள் தயாராவது பாராட்டுக்குரியது. போட்டி அதிகமாக இருந்து சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தால், அவர்கள் உயர் நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞராகப் பணியாற்றலாம். தன்னம்பிக்கை, ஆர்வம் மற்றும் விடாமுயற்சியுடன் இளம் வழக்கறிஞர்கள் நீதித்துறை தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசினார்.
உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதி அனிதா, நீதிபதிகள் வேல்முருகன், அப்துல்குத்தூஸ், மதி, குமரேஷ்பாபு, வடமலை, குமரப்பன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா கதிரவன், பாஸ்கரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள்,சங்க துணைத் தலைவர்கள் மகேஷ்பாபு, சுபபிரியா, பரேக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கப் பொருளாளர் ஜி.ராஜா நன்றி கூறினர்.