கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) தலைவர் நாராயணன் கூறியதாவது:-
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை திறனில் விரைவான கட்டத்துக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வணிக தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் பல பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி பயணங்கள் உள்பட 7 ஏவுதல்களை இலக்காக இஸ்ரோ கொண்டுள்ளது.
சந்திரயான்-4, 2028-ம் ஆண்டை இலக்காக கொண்டுள்ளது. சந்திரயான்-4 திட்டத்தை அரசு அங்கீகரித்துள்ளது. இது சந்திரனுக்கு சென்று திரும்பும் போது மண், பாறை மாதிரி எடுத்து வரும் பணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்கா, ரஷியா, சீனாவால் மட்டுமே இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து கூட்டு சந்திர துருவ ஆய்வு திட்டமான லுபெக்ஸ் திட்டத்தை இஸ்ரோ தொடங்கும். இந்த திட்டம் சந்திர தென் துருவத்தில் உள்ள நீர் மற்றும் பனி பிரதேசத்தை ஆய்வு செய்வதை நோக்கமாக கொண்டது. விரிவடைந்து வரும் தேவைக்கு ஏற்ப அடுத்த 5 ஆண்டுகளில் அதன் வருடாந்திர விண்கல தயாரிப்பை 3 மடங்காக அதிகரிக்க நோக்கமாக கொண்டு இஸ்ரோ செயல்பட்டு வருகிறது.
2035-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்ட இந்திய விண்வெளி நிலையத்திற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது. இதன் 5 தொகுதிகளில் முதலாவது 2028-ம் ஆண்டுக்குள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்த முயற்சி விண்வெளி நிலையத்தை இயக்கப்போகும் 3-வது பெரிய நாடாக இந்தியாவை மாற்றும். இந்தியாவின் ஆள் இல்லாத பயணங்களுக்கான இலக்கு 2025-ம் ஆண்டாக இருந்தது. அது தற்போது 2027-ம் ஆண்டுக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.
விண்வெளி துறை சீர்திருத்தங்களில் தனியார் பங்களிப்பு தற்போது அதிகரித்துள்ளது. உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு தற்போது சுமார் 2 சதவீதமாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் அதை 8 சதவீதமாக உயர்த்த இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது ரூ.72 ஆயிரத்து 725 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2033-ம் ஆண்டுக்குள் இது 3 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.