சென்னை,
கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது. இந்த டெஸ்டில் எந்த அணியும் 200 ரன்களை தாண்டவில்லை. நான்கு இன்னிங்சிலும் பவுமா மட்டுமே அரைசதம் அடித்தார்.
ஆடுகளத்தில் பவுன்சுடன், பந்து தாறுமாறாக சுழன்று திரும்பியதால் துல்லியமாக கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் தகிடுதத்தம் போட்டனர். இதனால் ஆடுகளம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இந்த பிட்சை தாங்கள்தான் கேட்டு வாங்கியதாக தெரிவித்தார். அத்துடன் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே தோல்விக்கு காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் பேட்டிங்கில் அசத்திய சுந்தர் பந்து வீசாததால் 4 ஸ்பின்னர்கள் அணியில் எதற்கு? என்று இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் டி20 போல டெஸ்ட் கிரிக்கெட்டில் பயிற்சியாளர் கம்பீர் செய்யும் தேவையற்ற மாற்றங்கள் மற்றும் தேர்வுகள் தோல்வியை கொடுப்பதாகவும் அஸ்வின் விமர்சித்துள்ளார். மேலும் 3வது இடத்தில் சாய் சுதர்சனை நீக்கி விட்டு வாஷிங்டன் சுந்தரை 3-வது வரிசையில் களமிறக்கியதும் தோல்விக்கு ஒரு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “சாய் சுதர்சன் போன்ற நல்ல வீரருக்காக நான் கவலைப்படுகிறேன். அணியிலிருந்து நீக்கப்பட்ட பின் அவர் என்ன நினைத்திருப்பார்? ஒரு அணியில் 4 ஸ்பின்னர்கள் விளையாடுவது அதிகம் என்று நான் நினைத்திருக்கிறேன். வாஷிங்டன் சுந்தர் 2வது இன்னிங்சில் ஒரு பந்து கூட வீசவில்லை. நீங்கள் விளையாட வைத்த 4 ஸ்பின்னர்களில் ஒருவர் ஒரு பந்தை கூட போடவில்லை. அப்படியெனில் அணியில் 4 ஸ்பின்னர்கள் எதற்கு?.
டி20 கிரிக்கெட்டில் நீங்கள் ஆல் ரவுண்டர்களை விளையாட வைப்பதன் காரணத்தை நான் அறிவேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ வீரர்களை தேர்ந்தெடுப்பது மட்டுமே வேலை செய்யும். திறமையான சுந்தரை 3வது இடத்தில் விளையாட வைத்த முடிவு சரியானதா? என்பதை காலம் மட்டுமே சொல்லும்.
தோல்விக்கு பிறகு நாம் அதைப் பற்றிப் பேசலாம். அதைப் பற்றிப் பகுப்பாய்வு செய்யலாம், ஆனால் நாம் அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். சாய் சுதர்சனுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக நான் நினைக்கிறேன். 3-வது இடத்தில் விளையாடும் வீரரை சூழ்நிலைகளுக்காக அடிக்கடி மாற்றக்கூடாது” என்று கூறினார்.