பாட்னா,
தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை நீது சந்திரா, பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர். மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் கமிஷனின் தூதராக அவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
தேர்தல் கமிஷனின் தூதராக நியமிக்கப்பட்டவர், கட்சி சார்பின்றி விழிப்புணர்வு பணிகளை ஏற்படுத்த வேண்டும். ஆனால் நீது சந்திரா அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை நீது சந்திராவை அந்த பொறுப்பில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கி உள்ளது.
இது தொடர்பாக மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பிரசாந்த் குமார், நீது சந்திராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘தேர்தல் நடைமுறையின்போது சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக நீங்கள் கருத்து தெரிவித்ததாக புகார்கள் வந்தன. இது உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கு எதிரானது. எனவே தேர்தல் கமிஷன் தூதர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள்’ என குறிப்பிட்டு இருந்தார்.