டாக்கா: ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், அவரை வங்கதேசத்திடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச வெளியறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கமல் ஆகியோருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதால் அவர்களை வங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும். மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது நட்புக்கு எதிரானது, நீதியை கேலி செய்யக் கூடியது.
எனவே, இந்த இரண்டு குற்றவாளிகளையும் உடனடியாக வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். குற்றவாளிகளை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ளதால், அதன்படி இருவரையும் வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாய கடமை இந்தியாவுக்கு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கமல் ஆகியோருக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் இன்று (திங்கள்கிழமை) மரண தண்டனை விதித்தது. நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் காவல் துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுனுக்கு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு பாரபட்சமானது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் ஷேக் ஹசீனா தெரிவித்திருந்தார். இந்த தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஷேக் ஹசீனா, “ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு மோசடி தீர்ப்பாயம் எனக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.
அவர்கள் பாரபட்சத்துடனும் அரசியல் உள்நோக்கத்துடனும் உள்ளனர். மரண தண்டனை விதித்திருப்பதன் மூலம், வங்கதேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை நீக்கவும், அவாமி லீக் கட்சியை இல்லாது ஒழிக்கவும் இடைக்கால அரசில் இருக்கும் தீவிரவாத நபர்கள், வெட்கக்கேடான, கொலைகார நோக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். கடந்த ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் நிகழ்ந்த அரசியல் பிளவால் இரு தரப்பிலும் நிகழ்ந்த மரணங்களுக்கு நான் இரங்கல் தெரிவிக்கிறேன். ஆனால், நானோ பிற அரசியல் தலைவர்களோ போராட்டக்காரர்களைக் கொல்ல உத்தரவிடவில்லை.” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி அவரை நாடு கடத்துமாறு வங்கதேசம் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
இந்தியா கூறுவது என்ன? – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள் அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக “வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில், வாங்கதேச மக்களின் நலன், அந்த நாட்டின் அமைதி, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகள், ஸ்திரத்தன்மை உள்ளிட்டவற்றுக்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்துக்காக தொடர்புடைய அனைவருடனும் நாங்கள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், “வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” குறித்து குறிப்பிடும்போது, இரட்டை அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம், இந்த தீர்ப்பை இந்தியா பொருட்படுத்தவில்லை என்ற அர்த்தம் எழுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாலும், அவரை வங்கதேசத்தின் தலைமை ஆட்சியாளராக இந்திய அரசு இதுவரை முழு மனதுடன் அங்கீகரிக்கவில்லை என்பதாலும் ஷேக் ஹசீனாவை இந்தியா திருப்பி அனுப்பாது என்றே அவர்கள் கருதுகிறார்கள்.