முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முக்கிய தீர்ப்பு

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு போரின்போது பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் தனி நாடாக உதயமானது. அப்போது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான போரில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மாணவர்கள் கடந்த 2024 ஜூன், ஜூலையில் பல போராட்டங்களில் ஈடுபட்டனர்.போராட்டத்தை அடக்க அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நடந்த போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் சுமார் 1,400 மாணவர்கள் உயிரிழந்தனர். 25,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 2024 ஆகஸ்டில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. தலைநகர் டாக்காவில் உள்ள நாடாளுமன்றம், பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு ஆகிய இடங்களை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், 2024 ஆகஸ்ட் 5-ம் தேதி ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்மடைந்தார். தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தை ஆட்சி செய்து வருகிறது. இந்த சூழலில், மாணவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வழக்கு விசாரணை தொடங்கியது.

‘மாணவர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, ஆதாரங்களை அழித்தது, மாணவர் சங்கத் தலைவர் அபு சயீத்தை கொலை செய்ய உத்தரவிட்டது, டாக்காவின் சங்கர்புல் பகுதியில் 6 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது’ என முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதுதொடர்பாக ஓராண்டுக்கும் மேலாக தீர்ப்பாயம் விசாரித்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கோலம் மோர்டுசா மஜும்தார் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நேற்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. 453 பக்க தீர்ப்பின் சாராம்சம் வருமாறு: ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் 1, 2, 3-வது குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளன. இதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. முன்னாள் காவல் துறை தலைவர் சவுத்ரி அப்துல்லா அல் மமூன் அரசுத் தரப்பு சாட்சியாக மாறியுள்ளார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவும், அசாதுஸ்மான் கானும் தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் தீர்ப்பாயத்தில் நேரில் மேல்முறையீடு செய்யலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கதேச அட்டர்னி ஜெனரல் முகமது கூறியதாவது: மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனாவும், அசாதுஸ்மான் கானும் இந்தியாவில் பதுங்கி உள்ளனர். அவர்களைக் கைது செய்ய சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்குச் சொந்தமான அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

வங்கதேசம் வலியுறுத்தல்: ஷேக் ஹசீனாவும், அசாதுஸ்மான் கானும் இந்தியாவில் உள்ளனர். அவர்களை ஒப்படைக்குமாறு இந்திய அரசை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது: முன்னாள் பிரதமர் ஹசீனா, இந்தியாவின் மிக நெருங்கிய நண்பர். அவரை நாடு கடத்த இந்திய அரசு நிச்சயமாக ஒப்புதல் அளிக்காது. இந்திய அரசு மறுக்கும் நிலையில் இன்டர்போல் அல்லது சர்வதேச கிரிமினல் போலீஸ் அமைப்பிடம் வங்கதேச அரசு உதவி கோரும்.

இன்டர்போல் மூலம் ஹசீனாவை கைது செய்ய முடியவில்லை என்றால் ஐ.நா. சபையிடம் வங்கதேச அரசு முறையிடும். ஐ.நா. சபை மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு மிகவும் வலுவாக இருப்பதால், தீர்ப்பாயத்தின் தீர்ப்பை வங்கதேச அரசால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘பாரபட்சமான தீர்ப்பு’ – தீர்ப்பு குறித்து ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மனித உரிமைகளை நான் ஒருபோதும் மீறவில்லை. எனது ஆட்சிக் காலத்தில் மனித உரிமைகளைப் பாதுகாத்தேன். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய அகதிகளுக்கு மனிதாபிமானத்துடன் அடைக்கலம் கொடுத்தேன். தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முகமது யூனுஸ் அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல. அந்த அரசின் கீழ் செயல்படும் தீர்ப்பாயமும் சட்டப்படி செல்லாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை நீக்க மறைமுகமாக சதி செய்யப்பட்டது. எனது அவாமி லீக் கட்சியை அழிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. என் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுக்கிறேன். தீர்ப்பாயத்தில் எனது சார்பில் வழக்கறிஞர் ஆஜராககூட அனுமதி வழங்கப்படவில்லை. என்னையும் எனது கட்சி நிர்வாகிகளையும் குறிவைத்து முகமது யூனுஸ் அரசு செயல்படுகிறது. என் மீதான குற்றச்சாட்டை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கலாம். இதற்கு வங்கதேச அரசு தயாராக இருக்கிறதா? தற்போதைய அரசின் நடவடிக்கைகளுக்கு நாம் தகுந்த பதில் அளிக்கும் நேரம் வரும். மக்களோடு இணைந்து நாம் வங்கதேசத்தை மீட்போம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.