நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் நடிப்பு கற்றுக் கொடுத்த ஆசிரியர் கே.எஸ். நாராயணசாமி உயிரிழந்துள்ளார். வயது மூப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் ரஜினி.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட திரைப்படப் பயிற்சி கல்லூரியில் அவருக்கு நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியராக இருந்துள்ளார் கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி. 92 வயதான அவர் சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்துவந்த நிலையில் இன்று (நவ. 17) காலை உயிரிழந்துள்ளார்.
கோபாலி ரஜினிகாந்த் மட்டுமின்றி அமிதாப்பச்சன், நாசர், சிரஞ்சீவி, ராதாரவி ஆகிய நடிகருக்கும் ஆக்டிங் மாஸ்டராக இருந்ததாகக் கூறப்படுகிறது. சில இயக்குநர்களையும் உருவாக்கியிருக்கிறார். ரஜினிகாந்த் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அங்கு வந்த இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினிகாந்த்தை தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தியவர் கோபாலி என்றும் கூறப்படுகிறது.

நாராயணசாமி புனேயிலுள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் முதல் மாணவராக திகழ்ந்தவர். மேலும் இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் சினிமா விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். தூர்தர்ஷன் இயக்குநராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு நேரில் சென்றதுடன், ஒரு மணிநேரம் அங்கே இருந்து அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.