புதுடெல்லி,
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 20,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இளைஞர்களின் தொடர் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, அங்கிருந்து தப்பித்து இந்தியாவில் கடந்த ஓராண்டாக தஞ்சமடைந்துள்ளார். தொடர்ந்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.
இதனிடையே வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அப்போதைய உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. .இந்த வழக்கில் மனித குலத்திற்கு எதிராக செய்த குற்றங்களுக்காக, ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்த நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளதுடன் மரண தண்டனை விதித்துள்ளது.முன்னதாக ஷேக் ஹசீனா, தன் சொந்த நாட்டு மக்களையே கொலை செய்ய உத்தரவிட்டதாகவும் வங்கதேச படுகொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.
அதன்படி ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமலுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முன்னாள் காவல்துறைத் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் தூக்கு தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார். அவர் சாட்சியாக மாறிய நிலையில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் தொடர்ச்சியாக ஷேக் ஹசீனா, தன்னுடைய தீர்ப்பு நியாயமாக இல்லை, அரசியல்ரீதியானது என்று கூறியிருந்தார். ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்திய அரசிடம் வங்கதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.
இதற்கிடையே, ஷேக் ஹசீனாவுக்கு, அந்நாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “ நெருங்கிய அண்டை நாடு என்ற அடிப்படையில் வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம் நிலைக்க இந்தியா விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளது.