பாட்னா: பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு பதவியேற்கிறது. நிதிஷ் குமார் 10-வது முறையாக மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஆர்ஜேடி, காங்கிரஸ் அடங்கிய மெகா கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதையடுத்து பிஹாரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் பாட்னாவில் நேற்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
காலையில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் பிற்பகல் வரை நீடித்தது. இதன்பிறகு மத்திய அமைச்சர் நித்யானந்த ராய், பாஜக மூத்த தலைவர்கள் நிதின் நவீன், கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இதர கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அவரை சந்தித்துப்பேசினர்.
இன்று ஆளுநருடன் சந்திப்பு: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள சட்டப்பேரவைத் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட உள்ளார். அதன் பிறகு ஆளுநர் ஆரிப் முகமது கானை அவர் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். அப்போது புதிதாக ஆட்சியமைக்கவும் அவர் உரிமை கோருவார். வரும் 19-ம் தேதி பிஹாரில் என்டிஏ அரசு பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.
மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் பாட்னாவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “பிஹாரில் அடுத்த சில நாட்களில் புதிய அரசு பதவியேற்கும். அமைச்சர்கள் யார் என்பது நவம்பர் 17-ம் தேதிக்குள் இறுதி செய்யப்படும். இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிஹார் அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: வரும் 19 அல்லது 20-ம் தேதி பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்பு விழா நடைபெறும். அப்போது பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் 10-வது முறையாக பதவியேற்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை. பிஹார் தேர்தலில் பாஜக 89, ஐக்கிய ஜனதாதளம் 85, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சி 19, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பிஹார் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 36 பேரை அமைச்சர்களாக நியமிக்க முடியும்.
புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்கள் லல்லன்சிங், சஞ்சய் ஜா ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். பாஜக மூத்த தலைவர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், வினோத் தாவ்டே உள்ளிட்டோரை அவர்கள் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் புதிய அமைச்சர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் பாஜகவின் புதிய அரசு பதவியேற்றது. அப்போது 17 புதியவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அதே ஆண்டில் மத்திய பிரதேசத்தில் பாஜக அரசு பதவியேற்றது. அப்போது 22 புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதே பாணியை பின்பற்றி பிஹாரிலும் பாஜக சார்பில் புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு பிஹார் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாஜகவில் 16 அமைச்சர்கள்: தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 எம்எல்ஏ.க்களுக்கு ஓர் அமைச்சர் என்ற வகையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி பாஜகவை சேர்ந்த 16 பேரும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 14 பேரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள். ராஷ்டிரிய
லோக் ஜன சக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 3 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம். சிறிய கட்சிகளுக்கு தலா ஓர் அமைச்சர் பதவி அளிக்கப்படும்.
பாஜக மூத்த தலைவர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் தற்போது துணை முதல்வர்களாக உள்ளனர். இதில் சாம்ராட் சவுத்ரி மீண்டும் துணை முதல்வராக பதவியேற்கக் கூடும்.
விஜய் குமார் சின்ஹாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம். பாஜக மூத்த தலைவர்கள் ராம்கிருபாள் யாதவ், மங்கள் பாண்டே, ரஜ்னீஷ் குமார் ஆகியோரில் ஒருவருக்கு புதிதாக துணை முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சியின் சார்பிலும் துணை முதல்வர் பதவி கோரப்படுவதாகத் தெரிகிறது.