நெல்லை பாய்ஸ்: “நெல்லைக்கு அரிவாளும், வன்முறையும்தான் அடையாளமா?" – திருமாவளவன் விமர்சனம்

ஆணவக் கொலையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நெல்லை பாய்ஸ்’. கதை திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கி, எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார் கமல் ஜி. கதையின் நாயகனாக புதுமுகம் அறிவழகனும் நாயகியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் புகழ ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். இவர்களுடன் வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.

ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார்.

திருமாவளவன்
திருமாவளவன்

அப்போது, “நெல்லை என்றாலே அரிவாள் என்ற பிம்பம் இருக்கிறது. எனக்கு நீண்டநாள்களாக ஒருக் கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. வன்முறை இல்லாமல் ஒரு திரைப்படம் எடுக்கவே முடியாதா? திரைப்படங்களில் காண்பிப்பதுபடியே திரைப்படங்களில் வன்முறைக் கலாச்சாரம் இருக்கிறதா?

ஒரு கதாநாயகன் 100 பேரை அடித்து வீழ்த்துவான், ரவுடியிசம் செய்தால்தான் அவன் ஹீரோ எனச் சித்தரிக்கும் இயக்குநர்கள் சிந்திக்க வேண்டும். நெல்லையில் கல்விமான்கள், தொழிலதிபர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் எனப் பல்வேறு சிறப்புகுரியவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், நெல்லை என்றாலே அரிவாள், வன்முறை கலாச்சாரம் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கும் போக்கு குறித்த வருத்தம் எனக்கு உண்டு. மேலும், இந்தப் போக்கை ‘வீரமும், காதலும் தமிழர் பண்பாடு’ என நியாயப்படுத்துகிறோம்.

வீரம் என்பதும், வன்முறை என்பதும் வேறு வேறு. நான் இந்த இயக்கத்தைத் தொடங்கும்போது தோழர்களிடம் பேசினேன். அப்போது, வீரம் என்றால் அரிவாளை தூக்குவது அல்ல. நெருக்கடிகள் சூழ்ந்தபோதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

நெருப்பலைக்குள் வீழ்ந்தபோதும் அடிமை நெறிமீறி பாய்வது தீரம் என எழுதினேன். வீரமும், தீரமும், வன்முறையோடு மூர்க்கமாக செயல்படுவது அல்ல. அரிவாளை தூக்கி நோஞ்சான்களை, நிராயுதபாணிகளை, கும்பலாக சேர்ந்து ஒருவரை வெட்டுவது வீரமல்ல.

ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எந்தத் தரப்பிலிருந்து நெருக்கடிகள் வந்தாலும் அதிலிருந்து விலகமாட்டேன் என உறுதியோடு இருப்பதுதான் வீரம்.

ரவுடியிசம் – ஹீரோயிசம், புரட்சி – வன்முறை எல்லாமே வேறு வேறு. ஆனால், இரண்டையும் ஒன்றோடு ஒன்று குழப்பிக்கொள்கிறார்கள்.

அம்பேத்கர் ஆயுதம் ஏந்துவதற்கான எந்தச் சூழலையும் அவர் உருவாக்கவில்லை. ஆனால், அம்பேத்கரின் அரசியல்தான் அரசமைப்புச் சட்டமாக இந்தியாவின் மையமாக இருக்கிறது. சுதந்திரம், சமூக நீதி, மதமற்ற அரசு வேண்டும் என நாம் பேசுவதெல்லாம் அம்பேத்கர் முன்வைத்த அரசமைப்புச் சட்டத்தின் மூலம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.