பிஹார் தேர்தல் வெற்றியின் எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைகளில் உள்ள பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1,800-ஆக உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி வெளியான பிஹார் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளில், 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து பிஹாரில் மீண்டும் தேசியஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கைய உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக செய்தித்தொடர்பாளர் அமித் மாள்வியா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பல சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற எம்எல்ஏவாக பதவியேற்றுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைகளில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது வரும் தேர்தல்களிலும் தொடரும். தற்போது நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைகளில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 1,654-ஆக உள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1,800-ஆக உயர்த்த பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. கடந்த 1985-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களின்போது காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று நாடு முழுவதும் 2,018 எம்எல்ஏக்களைப் பெற்றிருந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு எழுந்த அனுதாப அலையால் அதிக எம்எல்ஏக்களை அக்கட்சி பெற்றது. தற்போதுள்ள நிலையில் அடுத்த 2 ஆண்டுகளில் 1,800 எம்எல்ஏக்கள் என்ற நிலையை அடைய பாஜகவால் முடியும்.
காங்கிரஸ் அதன் உச்சத்தை மரபுரிமையாகப் பெற்றது. பாஜக, படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகிறது. ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும், போராட்டத்தின் மூலமூம், வளர்ச்சிப் பணிகளின் மூலமும் பாஜக தனது எம்எல்ஏக்களைப் பெற்று வருகிறது. எதிர்காலம் என்பது உழைக்கும் ஒரு கட்சிக்கே உரியதாகும். மரபில் வாழும் ஒரு கட்சிக்கே அல்ல.
2014-ம் ஆண்டு முதல் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்வு பெற்று வருகிறது. 2014-ல் நாடு முழுவதும் 1,035 எம்எல்ஏக்கள் இருந்தனர். இது 2015-ல் 997-ஆகவும், 2016-ல் 1,053-ஆகவும், 2017-ல் 1,365-ஆகவும், 2018-ல் 1,184-ஆகவும், 2019-ல் 1,160 ஆகவும், 2020-ல் 1,207-ஆகவும், 2021-ல் 1,278-ஆகவும், 2022-ல் 1,289-ஆகவும், 2023-ல் 1,441-ஆகவும், 2024-ல் 1,588-ஆகவும் இறுதியாக 2025-ல் 1,654-ஆகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்