
மும்பை: மகாராஷ்டிர மாநிலம், வசாய் நகரில் ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு படிக்கும் காஜல் கோண்ட் (12) நேற்று முன்தினம் பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு தோளில் புத்தகப் பையுடன் 100 முறை தோப்புக் கரணம் போடுமாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்படத் தொடங்கியது.
இதனால் வீடு திரும்பிய சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு சிறுமி நேற்று உயிரிழந்தார். குழந்தைகள் தினத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர், பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.