ஐஸ்வால்
மியான்மரைச் சேர்ந்த 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது மிசோரமில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் 12,361 குழந்தைகள் அடங்குவர். இவர்களில் பெரும்பாலோர் மியான்மரின் சின் மாநிலத்தின் சின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மியான்மரில் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு அகதிகள் வரத் தொடங்கினர். இதையடுத்து மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் சட்டவிரோத குடியேறிகளின் பயோமெட்ரிக் மற்றும் வாழ்க்கை வரலாற்று விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து மியான்மர் மற்றும் வங்காளதேச அகதிகளின் சேர்க்கை பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. அதன்படி, மிசோரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மியான்மர் அகதிகளின் பயோமெட்ரிக் சேர்க்கையை மிசோரம் 58.15 சதவீதமாக முடித்துள்ளதாக உள்துறை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, வங்காளதேசத்தின் சிட்டகாங் மலைப்பகுதிகளில் இருந்து தஞ்சமடைந்தவர்களில் 10.84 சதவீதத்தினரின் பயோமெட்ரிக் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.