அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) உணவகத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவருக்கு, சுமார் 35 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து கௌரவிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பர்கன் சிங் என்ற இந்திய வம்சாவளி நபர், கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து மெக்டொனால்ட்ஸில் பணியாற்றி வருகிறார். இவருடைய இந்த நீண்ட கால சேவையைப் பாராட்டி அந்த உணவக நிர்வாகம் அவருக்கு ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
அதுமட்டுமின்றி, அவரின் 40 ஆண்டு கால உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் 40,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 35.5 லட்சம் ரூபாய்) வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.

பர்கன் சிங் தனது தந்தையுடன் இணைந்து மெக்டொனால்ட்ஸில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் மேஜைகளைச் சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது மற்றும் சமையலறையில் உதவிகள் செய்வது போன்ற வேலைகளைச் செய்து வந்திருக்கிறார்.
அதன்பின்னர் வேலையின் மீது அதிக கவனம் செலுத்தி, கடையின் அனைத்து செயல்பாடுகளையும் கற்றுக்கொண்டிருக்கிறார். சில மாதங்களிலேயே அவரது திறமையைப் பார்த்து நிர்வாகம் அவருக்கு ‘ஸ்விங் மேனேஜர்’ (Swing Manager) என்ற பதவி உயர்வை வழங்கியிருக்கிறது.
இந்த உணவகத்தின் உரிமையாளரான லின்சே வாலன் இது குறித்து கூறுகையில், “பர்கன் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டார். அவர் தனது தந்தையுடன் இங்கே வேலைக்குச் சேர்ந்தார். இன்று நான் நான்கு மெக்டொனால்ட்ஸ் கிளைகளை நிர்வகித்து வருகிறேன். அதில் பர்கன் ஒரு முக்கிய தூணாக இருக்கிறார்” என்று பெருமிதமாகக் கூறியிருக்கிறார்.