குரலில் இனிமை… செயலில் வியூகம்! – குயில்களின் சுவாரஸ்யமான உலகம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

“குக்கூ…” என்ற அந்த ஒற்றைக் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. பாவியங்கள் தொடங்கி நவீன கவிதைகள் வரை இனிமைக்கு இலக்கணமாகச் சுட்டப்படுவது குயிலின் குரல் தான். ஆனால், அந்த இனிமையான குரலுக்குப் பின்னே மறைந்திருக்கும் தந்திரமும், சுவாரஸ்யமான வாழ்வியலும் பலரும் அறியாதது. அவற்றைப் பற்றிய ஒரு ருசிகரப் பயணம் இதோ!

 பாவியங்களும் , காவியங்களும் , பாடல்களும் , கவிதைகளும் இனிமைக்கு உதாரணமாய் குயில்களின் குரலையே எடுத்துக்காட்டாய் ,  உவமையாய் சொல்கின்றன .

 மிக இனிமையான சத்தத்தை எழுப்புவதில் குயில்கள் கைதேர்ந்தவை என்பதை நாம் அறிவோம் . ஆச்சரியம் என்னவென்றால், பெண் குயிலைக் காட்டிலும் ஆண் குயிலின் குரலில்தான் இனிமை அதிகம்.

 கேட்பதற்கும் , ரசிப்பதற்கும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரவல்லது . 

குயில்களின் சத்தத்தை அதிகாலையிலும் , அந்தி மாலை பொழுதிலும் நாம் கேட்டிருப்போம் .

ஆனால் அவற்றை கண்களால் பார்த்திருப்போமா என்றால் அதிக பதில்கள், `இல்லை’ என்று தான் வருகின்றன .

ஆண்குயில்களில் உடல் முழுக்க கருநிறமாகவும் , கண்கள் அடர் சிவப்பாகவும் காட்சியளிக்கும் . பெண்குயில்கள் பழுப்பு நிறமாகவும் , உடல் முழுக்க வெண்ணிற புள்ளிகளாலும் காட்சியளிக்கும் .

மரக்கிளைகளின் இலைகளுக்கு உள்ளாகவும் , கிளைகளின் நடுப்புறத்திலும் ஒளிந்து கொண்டு அதிகம் மனித கண்களுக்கு புலப்படாமல் , கிளைக்கு கிளை தாவி கூவும் தன்மையுடையது இந்த குயில்கள் .

தனிமை விரும்பிகள்!

காகங்கள், மைனாக்கள், குருவிகள் போல குயில்கள் “கூட்டாஞ்சோறு” சாப்பிடும் ரகம் அல்ல. இவை சமூகப் பறவைகள் (Social birds) இல்லை. இனப்பெருக்க காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆணும் பெண்ணும் தனித்தனியாகவே வலம் வரும் ‘தனிமை விரும்பிகள்’. பழஉண்ணிகளான (Frugivorous) இவை, அவ்வப்போது பூச்சிகளையும் ருசி பார்க்கும்.

இயற்கையின் ‘மாஸ்டர் பிளான்’ – கூட்டுக் கொள்ளை!

குயில்களின் வாழ்வியலில் மிகவும் திகைக்க வைக்கும் விஷயம், அவை கூடுகட்டுவதே இல்லை என்பதுதான் (Brood Parasitism). தனக்கென ஒரு வீடு இல்லை, முட்டையை அடைகாக்க நேரமும் இல்லை. இதற்காக அவை கையாளும் உத்திதான் ‘நவீன கால செவிலித்தாய்’ (Surrogacy) முறை. ஆனால், இதை அவை அரங்கேற்றும் விதம் ஒரு திரில்லர் சினிமாவுக்கு இணையானது!

1. திசை திருப்புதல்:

காகம் அல்லது மற்ற பறவைகளின் கூட்டை நோட்டமிடும் ஆண் குயில், முதலில் அந்தக் கூட்டின் அருகே சென்று சத்தமிட்டு வம்பிழுக்கும்.

2. துரத்தல்:

கோபமடைந்த ஆண் காகம், குயிலைத் துரத்திக் கொண்டு ஓடும். இதைப் பார்த்து பெண் காகமும் துரத்தச் செல்லும்.

3. ஊடுருவல்:

கூடு காலியான அந்தச் சில நொடிகள் போதும்… மரக்கிளையில் மறைந்திருக்கும் பெண் குயில், மின்னல் வேகத்தில் காகத்தின் கூட்டுக்குள் சென்று முட்டையிட்டுப் பறந்துவிடும்.

பரிணாமத்தின் பரிசு (Egg Mimicry)

காகம் ஏன் இதைக் கண்டுபிடிப்பதில்லை? இங்குதான் இயற்கை குயில்களுக்கு ஒரு வரத்தை அளித்துள்ளது. தான் எந்தப் பறவையின் கூட்டில் (காகம், மைனா, தவிட்டுக்குருவி) முட்டையிடுகிறதோ, அந்தப் பறவையின் முட்டை போலவே நிறத்தையும் வடிவத்தையும் மாற்றிக்கொள்ளும் ‘மிமிக்ரி’ வித்தை குயில்களுக்கு உண்டு.

ஏமாறும் தாய்மை திரும்பி வரும் காகமோ அல்லது குருவியோ, குயிலின் முட்டையைத் தன்னுடையது என்றே நினைத்து அடைகாக்கும். குஞ்சு பொரித்ததும், தாய்மை உணர்வைத் தூண்டும் ‘ஆக்ஸிடாசின்’ (Oxytocin) ஹார்மோன் சுரப்பால், வேற்று இனக் குஞ்சு என்று தெரியாமலே உணவு ஊட்டி வளர்க்கும்.

சில நேரங்களில் குயில் குஞ்சு வளர்ந்து நிறம் மாறும்போது, காகங்கள் உஷாராகி அதைத் துரத்திவிடுவதுண்டு. ஆனால் மைனாக்களும், குருவிகளும் கடைசி வரை ஏமாந்து, குயிலைத் தன் பிள்ளையாகவே வளர்த்தெடுக்கும். இன்னும் கொடுமை என்னவென்றால், முட்டையிலிருந்து முதலில் வெளிவரும் குயில் குஞ்சு, போட்டியைக் குறைக்க அந்தக் கூட்டில் உள்ள மற்ற முட்டைகளை கீழே தள்ளிவிடும் கொடூரமும் நிகழ்வதுண்டு.

ராஜதந்திரிகளா… வல்லுனர்களா?

தன்னால் கூடு கட்ட இயலவில்லை என்பதற்காகத் துவண்டு விடாமல், மற்ற பறவைகளின் உழைப்பையும், தாய்மை உணர்வையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் குயில்களை என்னவென்று சொல்வது? பறவை இனத்தின் ‘ராஜதந்திரிகள்’ என்பதா? அல்லது வாரிசுகளை வளர்க்க வியூகம் வகுக்கும் ‘வல்லுனர்கள்’ என்பதா?

எது எப்படியோ, 90 சதவீத குயில் இனங்கள் இந்த முறையையே பின்பற்றுகின்றன. ஆனால், இன்று நகரமயமாதலால் மரங்களும், தோப்புகளும் அழிந்து வருவதால், இந்த தந்திரக்காரப் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இனிய குரல் மட்டுமல்ல, இயற்கையின் விசித்திரமான படைப்புக்களில் ஒன்றான குயில்களையும் காக்க வேண்டியது அவசியம். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்… நிறைய மரங்களை வளர்ப்போம்!

தேர்தல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.