நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட மேலச்செவல், சொக்கலிங்கபுரம், பிராஞ்சேரி, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய நிலையில் இன்னும் ஓரு மாதத்தில் அறுவடைக்கு வரும் நிலையில் உள்ளன.

அறுவடை நிலையில் உள்ளதால் மாடுகளிடமிருந்து பாதுகாக்க விவசாயிகள் இரவு, பகலாக பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கனமழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்றால் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் எண்ணிக்கையிலான வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இந்த வாழைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வாழை ஒன்றிற்கு ரூ.100 முதல் ரூ.150 வரை செலவு செய்து குலை தள்ளிய நிலையில் சூறைக்காற்றில் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சேரன்மகாதேவி வேளாண்துறையினரும், வருவாய்த்துறையினரும் சேத கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் பேசினோம், “நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு கார், பிசானம் என இரண்டு முறை நெல் பயிரிடுகிறோம். அதுவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டால் மட்டுமே பயிரிட முடியும். ஆனால், வாழை அப்படியில்லை ஒரு முறை பயிரிட்டாலே 10 முதல் 12 மாதங்களில் அறுவடை செய்துவிட முடியும். நெல்லை விட வாழை கூடுதல் வருமானம் தருகிறது. அதனாலேயே சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை சாகுபடிக்கு முக்கியத்தும் தருகிறோம்.
கடந்த ஆண்டு ஏத்தன் ரக வாழை சாகுபடி செய்ததில் நல்ல வருமானம் கிடைத்தது. இந்தாண்டும் அதைப் போலவே வருமானம் பார்த்திடலாம் என நினைத்துதான் சாகுபடி செய்தோம். ஆனால், கனமழை, சூறைக்காற்றால் வாழைகள் முறிந்து விழுந்துள்ளது.

ஏத்தன் ரகத்திற்கு அடுத்தபடியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்த மொந்தன், பூவன், கற்பூரவல்லி, நாட்டு ரக வாழையும் முறிந்து விழுந்துள்ளது. மொத்தம் சுமார் 2 லட்சம் வாழைகள் வரை முறிந்து விழுந்துள்ளது. கடன் வாங்கி செலவு செய்துள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோனது” என்றனர், கண்ணீருடன். இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆய்வு மேற்கொண்டதுடன் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட ஆவண செய்வதாக உறுதியளித்தார்.