மும்பை,
நாட்டின் கடல் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். மாஹே’ போர்க்கப்பல் நேற்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் மாஹே ரக போர்க்கப்பல் இதுவாகும். ராணுவ தளபதி உபேந்திர திவேதி தலைமையில் மும்பை கடற்படை தளத்தில் நடந்த விழாவில் ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டது.
விழாவில் உபேந்திர திவேதி பேசுகையில், “ஐ.என்.எஸ். மாஹே கடற்படையில் இணைக்கப்பட்டதால் நாட்டின் கடல் பாதுகாப்பு வலிமையை அதிகப்படுத்த புதிய தளம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது மட்டுமின்றி உள்நாட்டில் சவாலான தொழில்நுட்பத்துடன் போர்க்கப்பலை உருவாக்க முடியும் என்ற இந்தியாவின் கடல்சார் திறனை உறுதி செய்துள்ளது” என்றார்.
ஐ.என்.எஸ். மாஹே போர்க்கப்பல் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது ஆகும். அளவில் சிறியதாக இந்தாலும் சக்திவாய்ந்த இந்த கப்பல், நாட்டின் கடற்கரைகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. குறிப்பாக எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தேடிப்பிடித்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. அதிநவீன எந்திரங்கள், ஆயுதங்கள், சென்சார்கள், தகவல் தொடர்பு அமைப்புகள், கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் இந்த போர்க்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.