WhatsApp New Rule: இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்துவதற்கான விதிமுறையில் மத்திய அரசு ஒரு விதிமுறை முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யவும் வாட்ஸ்அப் போன்ற செயலிகளை பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை உருவாக்கியுள்ளது மத்திய அரசு. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த விதிமுறை மாற்றத்துக்கான முழுமையான நோக்கம் என கூறியுள்ளது.
Add Zee News as a Preferred Source
மத்திய அரசின் புதிய விதிமுறை
இனி சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தவே முடியாது. வாடிக்கையாளர்களை அடையாளம் காண மொபைல் எண்ணைப் பயன்படுத்த வேண்டும். அதுவும் இப்போது ஆக்டிவில் இருக்கும் சிம் கார்டைக் கொண்டே WhatsApp, Telegram போன்ற செயலிகளை பயன்படுத்த முடியும். இப்போது வரை வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகள் ஒரு மொபைலில் ஆக்டிவ் சிம்கார்டு இல்லையென்றாலும், அந்த செயலிகளை பயன்படுத்த முடியும்.
மத்திய அரசுக்கு பெரிய சவால்
இது மோசடிகளை தடுப்பதில் பெரிய சவாலாக இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கவனத்திற்கு வந்திருப்பது என்னவென்றால், சிம் கார்டு இல்லாமல் செயலிகளை பயன்படுத்தும் வசதி, வெளிநாடுகளில் இருந்து சைபர் மோசடிகள் செய்யத் தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்புக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. எனவே, தொலைத்தொடர்பு அடையாளங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து, ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு அமைப்பின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கவும், ஆக்டிவ் சிம்கார்டுகளை கொண்டு செயலிகளை பயன்படுத்த மத்திய அரசு கட்டாயமாக்கும் முடிவுக்கு வந்துள்ளது.
புதிய விதிகள் என்ன சொல்கின்றன?
மத்திய அரசு ஏற்கனவே 2024 ஆம் ஆண்டில் டெலிகாம் சைபர் பாதுகாப்பு விதிகளை அறிவித்து, 2025 ஆம் ஆண்டிலும் அவற்றை மேம்படுத்தியுள்ளது. மொபைல் எண்களைப் பயன்படுத்தி பயனர்களை அடையாளம் காணும் அல்லது சேவைகளை வழங்கும் அனைத்து செயலிகளுக்கும் (Telecommunication Identifier User Entities – TIUEs) இந்த விதிகள் பொருந்தும். புதிய விதிகள், உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அவற்றில் முக்கியமாக இரண்டு அம்சங்கள் உள்ளன. இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 90 நாட்களுக்குள், அனைத்து செயலி சார்ந்த தகவல் தொடர்பு சேவைகளும், அந்தச் சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள செயலில் உள்ள (Active) சிம் கார்டுடன் தொடர்ச்சியாகப் பிணைக்கப்பட்டிருக்க (linked) வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதன் மூலம், குறிப்பிட்ட அந்தச் செயலில் உள்ள சிம் கார்டு இல்லாமல், செயலியைப் பயன்படுத்தவே முடியாது. வெப் வெர்ஷன் லாக்-அவுட் (Web Version Logout) அப்சனிலும் மாற்றம் வந்துள்ளது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 90 நாட்களுக்குள், மொபைல் செயலியின் வெப் வெர்ஷன் (Web Version) ஆறு மணி நேரத்திற்கு (6 மணி நேரம்) ஒருமுறை அல்லது அதற்கு முன்னதாகத் தானாகவே லாக் அவுட் (Logout) ஆவதை உறுதி செய்ய வேண்டும். மீண்டும் பயன்படுத்த, பயனர் QR குறியீட்டைப் பயன்படுத்திச் சாதனத்தை மீண்டும் இணைக்க அனுமதிக்க வேண்டும்.
விதிமுறை மீறினால் என்ன தண்டனை?
புதிய விதிகளுக்குக் கீழ் வரும் அனைத்துச் செயலிகளும், இந்த உத்தரவுகள் வழங்கப்பட்ட 120 நாட்களுக்குள் தொலைத்தொடர்புத் துறைக்கு (DoT) இணக்க அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். விதிமுறைகளுக்கு இணங்கத் தவறினால், தொலைத்தொடர்பு சட்டம் 2023 மற்றும் டெலிகாம் சைபர் பாதுகாப்பு விதிகள் 2024 (திருத்தப்பட்டபடி) மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள், வாட்ஸ்அப் மற்றும் பிற மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்துவோர் இனி தங்கள் சாதனங்களில் சிம் கார்டை செயலில் வைத்திருப்பதை கட்டாயமாக்குகிறது.
About the Author

Karthikeyan Sekar
Karthikeyan Sekar
…Read More