ஐபிஎல்லுக்கு நன்றி, நான் வரவில்லை – மேக்ஸ்வெல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

glenn maxwell : ஐபிஎல் 2026 தொடரில் நான் பங்கேற்வில்லை மேக்ஸ்வெல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் நடக்க இருக்கும் மினி ஏலத்துக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய முடிவு இது என தெரிவித்திருக்கும் மேக்ஸ்வெல், இந்த லீக் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது என்ற நன்றியுணர்வுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் லீக், என்னை ஒரு கிரிக்கெட் பிளேயராகவும், ஒரு நல்ல மனிதராகவும் உருவெடுக்க உதவியதாகவும், ஐபிஎல் தொடரின் மூலம் பல உலக தரம் வாய்ந்த பிளேயர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்றது அதிர்ஷ்டம் என்றும் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

மேக்ஸ்வெல் விலகல்

மேலும், நான் விளையாடிய எல்லா அணிகளும், ரசிகர்களின் அந்த ஆரவாரமான உற்சாகமும் என்றென்றும் என்னுடன் இருந்துகொண்டே இருக்கும் என்றும் மேக்ஸ்வெல் உருக்கமாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் மேக்ஸ்வெல், விரைவில் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார். மேக்ஸ்வெல்லின் விலகல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரரான அவர், கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்த்தளவுக்கு விளையாடவில்லை. பார்ம்அவுட், அடுத்தடுத்து காயம் காரணமாக கடந்த ஐபிஎல் போட்டியில் கூட பாதியில் விலகினார்.

மேக்ஸ்வெல்லுக்கு 37 வயதாகிறது. அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விடுவித்துவிட்டது. கடந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் இவரை ரூ. 4.2 கோடிக்கு எடுத்தது. ஆனால், இந்த ஆண்டு ஏலத்தில் மேக்ஸ்வெல் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் போக வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே இந்த முடிவை அவர் எடுத்துவிட்டார்.

நட்சத்திர வீரர்கள் விலகல்:

மேக்ஸ்வெல்லை தவிர, பாஃப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோரும் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என அறிவித்துள்ளனர்.  இவர்கள் இருவரும் ஐபிஎல்-லுடன் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் 11-வது சீசனில் விளையாட உள்ளனர். மற்றொரு பெரிய வீரரான ஆண்ட்ரே ரஸ்ஸல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ‘பவர் கோச்’ ஆக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆல்-ரவுண்டர்களுக்கு வாய்ப்பு:

மேக்ஸ்வெல் ஏலத்தில் இல்லாததால், கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டோன், டெலானோ போட்கீட்டர், சிக்கந்தர் ராசா, ஜேசன் ஹோல்டர் போன்ற ஆல்-ரவுண்டர்களின் விலைகள் மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக அடிப்படை விலை கொண்ட இந்தியர்கள்:

ஐபிஎல் 2026 ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு 45 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே அடங்குவர்.

வெங்கடேஷ் ஐயர்: மெகா ஏலத்தில் ரூ. 23.75 கோடிக்கு வாங்கப்பட்ட இவர், பின்னர் நைட் ரைடர்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டார். இடது கை டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனான இவர், மீண்டும் இந்த ஆண்டு மினி ஐபிஎல் ஏலத்தில் பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப் பணத்துடன் ஏலத்திற்கு வரும் கேகேஆர் அணி இவரை மீண்டும் வாங்க வாய்ப்புள்ளது.

ரவி பிஷ்னோய்: இவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் ரூ. 11 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இவருடைய பங்களிப்பு குறைவாகவே இருந்ததால் விடுவிக்கப்பட்டார். சர்வதேச அனுபவம் கொண்ட, உள்நாட்டு சுழற்பந்து வீச்சாளர்களில் இவரே மிகவும் பிரபலமானவராகக் கருதப்படுவதால், இவரை ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் குறிவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author


Karthikeyan Sekar

Karthikeyan Sekar

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.