டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு இன்று காலை விருந்து

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்த நிலையில் இறுதியில் சித்தராமையா முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். முதல்-மந்திரி பதவியை 2 பேரும் ஆளுக்கு 2½ ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி சித்தராமையா ஆட்சி அதிகாரத்தில் 2½ ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டதால் முதல்-மந்திரி பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திடீரென போர்க்கொடி தூக்கினார். இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது.

ஒரு வாரம் குழப்பம் நீடித்த நிலையில் காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி சித்தராமையா வீட்டில் டி.கே.சிவக்குமார் சிற்றுண்டி கூட்டத்தில் கலந்துகொண்டார். தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று 2 பேரும் விளக்கம் அளித்தனர். இதன்மூலம் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது வீட்டிற்கு காலை விருந்துக்கு வருமாறு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் சித்தராமையா சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டிற்கு வருகிறார். அங்கு அவருக்கு மிகவும் பிடித்தமான நாட்டு கோழி குழம்பு, ராகி உருண்டை உள்ளிட்டவை பரிமாறப்படும் என்று கூறப்படுகிறது.

முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் மேலிட முடிவை இருவரும் ஏற்போம் என்று ஏற்கனவே சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.