அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார்.
அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முந்தையப் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில், ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தினுடைய இந்திய பதிப்பின் ஆசிரியர் அனுபமா சோப்ரா நடிகர் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தார்.

அந்தப் பேட்டியின்போது, அஜித்தின் எளிமை அனுபமா சோப்ராவை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
இப்போது அவர் தயாரிப்பாளர்களின் ரவுண்ட் டேபிள் நேர்காணல் செய்திருக்கிறார். இந்தப் பேட்டியில் அவர் அஜித் குறித்து பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில் அவர், “சமீபத்தில் துபாயில் நான் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தேன். அப்போது அவருடன் யாருமில்லை. எனக்காக அங்கொரு மேக்கப் செய்யும் நபர் இருந்தார்.
ஆனால், அவர் மேக்கப் செய்து கொள்ளமாட்டார். அவருடன் மேக்கப் போடும் நபர் இல்லை. ஆனால், என்னுடன் அதற்காக ஒரு நபர் இருந்தார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் இப்படி இருக்கிறார் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடன் ஒரு பேக் எடுத்து வந்தார்.
பேட்டி நடைபெற்ற அறையின் ஓரத்திலேயே பேட்டிக்கு அவர் தயாரானார். அதுமட்டுமல்ல, எங்களுக்காக அவர் கதவு திறந்து நின்று கொண்டிருந்தார்!” என ஆச்சரியமாகக் கூறினார்.

அனுபமா சோப்ரா இதைக் கூறியப் பிறகு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி, “அவர் எப்போதும் ஸ்வீட் & சிம்பிளாக இருப்பார்.” எனக் கூறினார்.
அதைத் தொடர்ந்து இந்தப் பேட்டியில் அர்ச்சனா கல்பதி, “ப்ரீ-புரொடக்ஷன் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அதற்கு புரொடக்ஷன் பட்ஜெட்டிலிருந்து 10 சதவீதத்திற்கு மேல் போக விட மாட்டேன்.
தெளிவு இல்லாத இயக்குநரிடமும் நான் வேலை செய்ய மாட்டேன். சினிமாவில் 9-5 வேலை நேரம் என்பது சாத்தியமே இல்ல. யாருடைய நேரத்தையும் வீணாக்காமல் இருப்பதே பொறுப்பு.” என்றார்.